நாளை தமிழகம் வரும் ராகுல் காந்தி.. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யுடன் சந்திப்பு..
தமிழகம் வரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யையும் சந்திப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் டெல்லி சென்றபோது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரை சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சந்திப்பின்போது, மேகதாது அணை விவகாரம் குறித்தும் ஆலோசனை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை 31, 2026: நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, ஆகஸ்ட் 1ஆம் தேதி தமிழகம் வருகிறார். தமிழக காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் பதவியேற்றதைத் தொடர்ந்து, ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை, காங்கிரஸ் நிர்வாகிகளுக்காக “இயக்க மறு சீரமைப்பு திட்டம்” என்ற பெயரில் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் பயணத்தின் போது, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை சந்திப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
ரூ. 1 கோடி செலவில் பயிற்சி முகாம்:
சுமார் ரூ.1 கோடி செலவில், சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. வரவிருக்கும் இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியை எவ்வாறு வலுப்படுத்த வேண்டும், நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்தப் பயிற்சியில் விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க: கட்டணத்தைக் குறைக்காத தனியார் பள்ளிகள்.. அமைச்சர் ராஜ்மோகன் போட்ட அதிரடி உத்தரவு!!
பயிற்சி முகாமின் கடைசி நாளான நாளை, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வருகிறார். அவர் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு, காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாற்ற உள்ளார். அதேசமயம், கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனையும் மேற்கொள்ள உள்ளார்.
நிர்வாகிகளுடன் கலந்தாலோசிக்கும் ராகுல் காந்தி:
காங்கிரஸ் கட்சித் தரப்பில் தெரிவிக்கையில், இந்தப் பயிற்சி முகாமில் விவசாயிகள், 100 நாள் திட்டப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல் மற்றும் நேரடி களப்பயிற்சிகளும் வழங்கப்பட்டதாகவும், பொதுமக்களுடன் நேரடித் தொடர்பை வலுப்படுத்தும் நோக்கில் ராகுல் காந்தி நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதல்வர் விஜய்யை சந்திக்க திட்டம்:
மேலும், இந்தப் பயணத்தின்போது நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யையும் சந்திப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: நீட் தேர்வு.. நாடாளுமன்றத்தில் திமுக – அதிமுக எம்பிக்கள் இடையே கடும் வாக்குவாதம்..
ஏற்கனவே தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் டெல்லி சென்றபோது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரை சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சந்திப்பின்போது, மேகதாது அணை விவகாரம் குறித்தும் ஆலோசனை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.