போலி கஸ்டமர் கேர் மோசடி: ரூ.10000 மீட்க ஒரு லட்சத்தை இழந்த விவசாயி

Krishnagiri Cybercrime:கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த திம்மராயப்பா, போன் பே மூலம் நண்பருக்கு ரூ.10,000 அனுப்ப தவறாக வேறு நபருக்கு அனுப்பினார். பின்னர் போலி கஸ்டமர் கேர் என அறிமுகப்படுத்திய நபர், அவரிடம் வங்கி விவரங்களைப் பெற்று ரூ.1 லட்சம் வரை மோசடி செய்தார்.

போலி கஸ்டமர் கேர் மோசடி: ரூ.10000 மீட்க ஒரு லட்சத்தை இழந்த விவசாயி

போலி கஸ்டமர் கேர் மோசடி

Published: 

03 Jun 2025 08:59 AM

கிருஷ்ணகிரி ஜூன் 03: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த திம்மராயப்பா தனது நண்பரிடம் ரூ.10,000 கடன் வாங்கி, மே 25 அன்று ‘போன் பே’ வழியாக செலுத்த முயன்றபோது, தவறாக வேறு நபருக்கு பணம் அனுப்பப்பட்டது. அந்த நபர் போனை எடுக்காததால், திம்மராயப்பா பாகலூர் போலீசிடம் புகார் செய்தார். போலீசார் 1930 எண்ணில் புகார் செய்ய கூற, அவர் தொடர்பு கொண்டபோது போலி ‘கஸ்டமர் கேர்’ நபர் ஒருவர் போலீசரென நடித்தார். அவர் திம்மராயப்பாவின் தனிப்பட்ட மற்றும் வங்கி விவரங்களை பெற்று, திம்மராயப்பாவிடம் ரூ.1 லட்சம் வரை பணம் ஏமாற்றினார். பின்னர் பணம் வருவதாக கூறி தொடர்பை துண்டித்தார். உண்மையை உணர்ந்த திம்மராயப்பா, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளார்.

தவறுதலாக வேறு ஒரு நபரின் எண்ணிற்கு 10 ஆயிரம் பணம் அனுப்புதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலூர் பகுதியைச் சேர்ந்த பி.முதுகானப்பள்ளியைச் சேர்ந்த திம்மராயப்பா (வயது 46), தனது நண்பர் பட்டவாரப்பள்ளி சீனிவாசனிடம் ரூ.10,000 கடனாக வாங்கியிருந்தார். 2025 மே 25-ம் தேதி மாலை, அந்த பணத்தை ‘போன் பே’ மொபைல் பயன்பாட்டில் மூலம் செலுத்தும்போது, தவறுதலாக வேறு ஒரு நபரின் எண்ணிற்கு பணம் அனுப்பப்பட்டுவிட்டது.

தவறாக பணம் சென்ற எண்ணுக்கு திம்மராயப்பா பலமுறை தொடர்பு கொள்ள முயன்றாலும், அந்த நபர் போனை எடுக்கவில்லை. இதையடுத்து அவர் பாகலூர் காவல் நிலையத்தில் தகவல் அளித்தார். போலீசார், 1930 என்ற சைபர் கிரைம் உதவிக் எண்ணில் புகார் அளிக்க அறிவுறுத்தினர்.

ஒரு போலி ‘கஸ்டமர் கேர்’ நம்பரால் விபரீதம்

திம்மராயப்பா 1930 எண்ணில் தொடர்பு கொண்ட போது, தவறாக ஒரு போலி ‘கஸ்டமர் கேர்’ எண்ணை அடைந்தார். அதில் பேசிய நபர் விஜயகுமார் எனத் தன்னை அறிமுகப்படுத்தி, போலீசாரென கூறினார். அவர் திம்மராயப்பாவின் அடையாள அட்டை, வங்கி கணக்கு மற்றும் ஆதார் எண்ணை கேட்டுக்கொண்டு, வங்கி விபரங்களை சரிபார்ப்பதாக கூறி, ஒரு எண்ணுக்கு ரூ.1 அனுப்புமாறு கூறினார். திம்மராயப்பாவும் அதனை அனுப்பினார்.

விவசாயிடம் ஒரு லட்சம் வரை மோசடி

அந்த நபர், “அடுத்த நாள் உங்கள் வங்கிக்கணக்கில் பணம் வரம்” என கூறியபோதும், எவ்வித பணமும் வரவில்லை. பின்னர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த அந்த நபர், புதிய மொபைல் எண்ணை வழங்கி, அதற்கும் ‘கூகுள் பே’ வாயிலாக இரண்டு தவணைகளாக ரூ.4,999 மற்றும் ரூ.95,000 என மொத்தம் ரூ.1 லட்சம் பணம் பெறினார். பின்னர், “தவறுதலாக அனுப்பிய ரூ.10,000 சேர்த்து, மொத்தம் ரூ.1.10 லட்சம் உங்கள் கணக்கில் வந்து விடும்” எனக் கூறியதற்குப் பிறகு, அவர் தொடர்பை துண்டித்தார்.

இது தொடர்பாக மீண்டும் 1930 எண்ணில் அழைத்த திம்மராயப்பா, அந்த நேரத்தில் தான் உண்மையான சைபர் கிரைம் அதிகாரிகளை அணுகியுள்ளார். தான் ஏமாறியதை உணர்ந்த திம்மராயப்பா, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் முறையீடு செய்துள்ளார்.