Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு கடந்து வந்த பாதை.. !

Anna University Student Assault: அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஞானசேகரனுக்கு சென்னை மகளிர் நீதிமன்றம் 30 ஆண்டுகள் குறையாத ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 11 பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட அவருக்கு, பல்வேறு பிரிவுகளின் கீழ் தனித்தனி தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு கடந்து வந்த பாதை.. !
அண்ணா பல்கலை வழக்கு கடந்து வந்த பாதைImage Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 02 Jun 2025 13:32 PM

சென்னை ஜூன் 2: அண்ணா பல்கலைக்கழக (Anna University) மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் குறையாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த சம்பவம் 2024 டிசம்பரில் நடைபெற்றது. போலீசாரின் விசாரணையில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது 11 பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. விவகாரம் அரசியல் பரப்பரப்பாக மாற, “யார் அந்த சார்?” என்ற கோஷம் சமூகத்தில் பேசப்பட்டது. இன்று மகளிர் நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் தீர்ப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், முக்கிய குற்றவாளி ஞானசேகரனுக்கு சென்னை மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிபதி ராஜலட்சுமி, 11 பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரனுக்கு 10 பிரிவுகளின் கீழ் தண்டனை விதித்து, 30 ஆண்டுகள் குறையாத ஆயுள் தண்டனையை வழங்கினார்.

சம்பவத்தின் தொடக்கம்

இந்த சம்பவம் கடந்த 2024 டிசம்பர் 23ஆம் தேதி நடந்ததாகக் கூறப்படுகிறது. அடுத்த நாள், சென்னையின் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மாணவி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார்.

விசாரணையின் திருப்பங்கள்

ஞானசேகரன் மீது பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை எழுந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க உத்தரவிட்டது. 2025 ஜனவரி 5ஆம் தேதி ஞானசேகரன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

அரசியல் பரபரப்பு

வழக்கில் ஞானசேகரன் திமுகவுடன் தொடர்புடையவர் என புகைப்படங்கள் வெளியாக, அதிமுக “யார் அந்த சார்?” என்ற கேள்வியை முன்வைத்து தீவிர பிரச்சாரம் நடத்தியது. இது சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

விசாரணை மற்றும் குற்றப்பத்திரிகை

100 பக்க குற்றப்பத்திரிகை பெண் அதிகாரிகள் தலைமையிலான விசாரணை குழுவால் தயாரிக்கப்பட்டு, 2025 பிப்ரவரி 24ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின், 2025 ஏப்ரல் 23ஆம் தேதியிலிருந்து 29 சாட்சிகளிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் நடத்தப்பட்டன. 2025 மே 20ஆம் தேதி விசாரணை முடிவடைந்தது.

முக்கிய தீர்ப்பு – 30 ஆண்டுகள் குறையாத ஆயுள்

2025 ஜூன் 2ஆம் தேதி, தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. 11 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக விசாரணை நடைபெற்ற நிலையில், பின்வரும் தண்டனைகள் விதிக்கப்பட்டன:

பாலியல் வன்கொடுமை (பிரிவு 64(I)) – 30 ஆண்டுகள் குறையாத ஆயுள்

கொலை மிரட்டல் (பிரிவு 351(3)) – 7 ஆண்டுகள் & ரூ.10,000 அபராதம்

தகவல் அழித்தல் (பிரிவு 238(B)) – 3 ஆண்டுகள்

அத்துமீறி நடத்தல் (பிரிவு 329) – 3 ஆண்டுகள்

தடுத்து வைக்குதல் (பிரிவு 126(2)) – 1 மாதம்

கடத்தல் (பிரிவு 87) – 3 ஆண்டுகள்

காயப்படுத்தல் (பிரிவு 127(2)) – 1 ஆண்டு

விருப்பத்திற்கு மாறான வன்கொடுமை (பிரிவு 75(2)) – 3 ஆண்டுகள்

கடுமையான தாக்குதல் (பிரிவு 76) – 7 ஆண்டுகள்

தகவல் தொழில்நுட்ப சட்டம் 66(E) – 3 ஆண்டுகள்

சமூகம் பேசும் தீர்ப்பு

இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஒரு கடும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது போலி அதிகாரம், அரசியல் பின்னணி போன்ற பாதுகாப்புகளால் தப்பிக்க முடியாது என்பதை இந்த தீர்ப்பு வெளிக்கொணர்கிறது. பொள்ளாச்சி வழக்கில் சாகும் வரை ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டிருந்தது போன்று, இவ்வழக்கும் அதே பாதையில் நகர்கிறது.

அண்ணா பல்கலைக்கழக மாணவியின் உரிமைக்காக போராடிய இந்த வழக்கு, நீதியின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் முடிவடைந்துள்ளது. நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு, பெண்கள் பாதுகாப்பு குறித்து சமூகத்தில் மறுபடியும் முக்கியத்துவம் பெறச்செய்கிறது.