பாதை தகராறு.. அண்ணியை மண்வெட்டியால் அடித்துக் கொன்ற கொழுந்தன்!
Kanyakumari Crime News: கன்னியாகுமரி அருகே நிலத் தகராறில் முன்னாள் ராணுவ வீரர் பிரகலாதன், தனது அண்ணியான வசந்தாவை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதை பிரச்சனை காரணமாக ஏற்பட்ட தகராறில், பிரகலாதன் வசந்தாவை தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கன்னியாகுமரி, செப்டம்பர் 25: கன்னியாகுமரி அருகே வீட்டின் பாதை தகராறில் அண்ணன் மனைவியை அடித்துக் கொன்ற முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபரை கைது செய்தனர். இந்த கொலை சம்பவம் அம்மாவட்ட மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே மாறப்பாடி பறையன்விளை என்ற பகுதி உள்ளது. இந்தப் பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். இவரது மனைவியான வசந்தா தனது மூன்று பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.
இவர்களது பக்கத்து வீட்டில் பிரகலாதன் என்பவர் வசித்து வருகிறார். முன்னாள் ராணுவ வீரரான இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பிரகலாதன் தற்போது கூடங்குளம் அனல் மின் நிலையத்தில் வேலை செய்து வருகிறார். பிரகலாதன் உயிரிழந்த கிருஷ்ணசாமியின் உடன் பிறந்த தம்பியாவார். ஆனால் வசந்தாவுக்கும் பிரகலாதனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது.
குறிப்பாக கடந்த மூன்று மாதமாக வீட்டிற்கு அருகில் செல்லும் பாதை சம்பந்தமாக இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் பிரகலாதன் புதிதாக கார் வாங்கியுள்ளார். அதனை அவரது வீட்டிற்கு செல்லும் பாதையில் நிறுத்த முயன்றுள்ளார். ஆனால் 3 அடி மட்டுமே அந்த பாதை இருந்ததால் காரை உள்ளே கொண்டு போக முடியாத நிலை ஏற்பட்டது.




இதையும் படிங்க: பெண்ணுடன் தனிமையில் இருந்த நபர்.. பணம் தர மறுத்ததால் கொலை!
இதனையடுத்து பாதையை விரிவாக்கம் செய்யும் பணிகளை தொடங்கியுள்ளார். ஆனால் அது பயனளிக்கவில்லை. இதனால் பிரகலாதன் தனது காரை வீட்டில் இருந்து சில அடி தூரத்தில் உள்ள தெருவில் நிறுத்தியுள்ளார். இந்த நிலையில் பாதையை விரிவாக்கம் செய்வதற்கு வசந்தா இடையூறாக இருப்பதாக பிரகலாதன் நினைத்து வந்துள்ளார்.
இதனை தொடர்ந்து நேராக அவரிடம் சென்று தகராறு செய்துள்ளார். அதன்படி நேற்று முன் தினம் (செப்டம்பர் 23) மதிய நேரத்தில் வசந்தா வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்கு நுழைந்த பிரகலாதன் பாதையை விரிவாக்கம் செய்ய முடியாத ஆத்திரத்தில் அங்கிருந்த பாத்திரம் உள்ளிட்ட பொருட்களை அடித்து சேதப்படுத்தியுள்ளார்.
தொடர்ந்து மண்வெட்டி கைப்பிடியால் வசந்தாவையும் சரமாரியாக தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி விழுந்தார். சத்தம் கேட்டு வசந்தா வீட்டிற்கு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று (செப்டம்பர் 24) மதியம் சிகிச்சை பலனின்றி வசந்தா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க: 71 வயதில் 2வது திருமணம் செய்ய இந்தியா வந்த பெண் கொலை.. 75 வயது நபர் தீட்டிய சதி திட்டம்!
இந்த சம்பவம் கொடுத்து அருமனை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து முதலில் பிரகலாதன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின் வசந்தா உயிரிழந்ததும் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பிரகலாதனை கைது செய்தனர். வசந்தாவின் உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட பின் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.