பணம் கொடுக்கல் -வாங்கல் தகராறு.. பாரில் ஒருவர் கொலை!
Pudukkottai Crime News: புதுக்கோட்டை மாவட்டத்தில், பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான தகராறில், நித்யராஜ் என்ற நபர் அவரது நண்பர் சரவணனால் கொலை செய்யப்பட்டார். 22,000 ரூபாய் கடன் திருப்பிச் செலுத்தாததால் ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியது. ஆத்திரமடைந்த சரவணன் கத்தியால் குத்தி நித்யராஜைக் கொலை செய்தார்.

புதுக்கோட்டை, செப்டம்பர் 23: புதுக்கோட்டை மாவட்டத்தில் நண்பர்கள் இடையே பணம் கொடுக்கல், வாங்கலில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள எஸ்.எஸ்.நகரை சேர்ந்தவர் நித்யராஜ். 40 வயதான இவர் தனது தந்தை லாரி புக்கிங் அலுவலகம் நடத்தி வரும் நிலையில் அதனை கவனித்து வந்தார். ஆனால் நித்யராஜ் கடந்த ஓராண்டாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இவருக்கு புதுக்கோட்டை மாவட்டம் சின்னப்பா நகரை சேர்ந்த சரவணன் என்பவர் நண்பராக உள்ளார் இவர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் செயல்படும் தனியார் மருத்துவமனையின் மருந்தகத்தில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.
கடன் வாங்கி கொடுக்காத ஆத்திரம்
இப்படியான நிலையில் வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்ததால் நித்யராஜூக்கு பணத்தேவை ஏற்பட்டது. இதனால் சரவணனிடம் ரூபாய் 22 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் சொன்னபடி அதனை அவர் திருப்பிக் கொடுக்காமல் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து தனக்கு தேவை ஏற்பட்டதால் பணத்தை பலமுறை கேட்டும் நித்யராஜ் தர மறுத்ததால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்தது.
இதையும் படிங்க: அண்ணிக்களுடன் அத்துமீறிய தொடர்பு.. இளைஞர் கழுத்தறுத்து கொலை
பாரில் வைத்து நடந்த கொலை
இந்த நிலையில் புதுக்கோட்டை டிவிஎஸ் கார்னர் அருகே உள்ள எஃப் எல் 2 ரக பாரில் செயல்படும் ஏசி அறையில் நித்யராஜ் மற்றும் சரவணன் ஆகியோர் நேற்று (செப்டம்பர் 22) மதியம் மருந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது மது போதையில் இருவரும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பேசினர். அதில் சரவணன் நித்யராஜ் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இது கைகலப்பாக மாறிய நிலையில் ஆத்திரமடைந்த சரவணன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நித்யராஜின் மார்பு பகுதியில் பயங்கரமாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் பாரின் உள்ளே நித்யராஜ் மயங்கி விழுந்தார். இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் நித்யராஜை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: Cuddalore: காதலனுடன் பிரச்னை.. வீடியோ கால் பேசும்போது பெண் தற்கொலை
ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து நண்பர் நித்யராஜ் கொலை செய்ததற்காக மருந்தக ஊழியர் சரவணனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து சரவணன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.