Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் முதலீடு… சர்ச்சைக்கு மத்தியில் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா விளக்கம்…

Foxconn Investment in Tamil Nadu: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஃபாக்ஸ்‌கான் இந்தியா நிறுவனத்தின் பிரதிநிதியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசியிருந்தார். இந்த சந்திப்பின் போது ஃபாக்ஸ்‌கான் நிறுவனம் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு செய்ய ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் முதலீடு… சர்ச்சைக்கு மத்தியில் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா விளக்கம்…
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 15 Oct 2025 06:58 AM IST

சென்னை, அக்டோபர் 15, 2025: தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்‌கான் நிறுவனம் ரூ.15,000 கோடி புதிய முதலீடு செய்ய உள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 14,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஃபாக்ஸ்‌கான் நிறுவனம், அத்தகைய எந்த முதலீட்டையும் செய்வதாக உறுதி அளிக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொழில் முதலீடுகள் விவகாரத்தில் திமுக அரசு செய்யும் மோசடிகளுக்கான எடுத்துக்காட்டு என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். அன்புமணி ராமதாஸின் இந்த கருத்து பெரும் சர்ச்சைக்கு உள்ளான விஷயமாக மாறியுள்ளது.

தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் முதலீடு:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஃபாக்ஸ்‌கான் இந்தியா நிறுவனத்தின் பிரதிநிதியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசியிருந்தார். இந்த சந்திப்பின் போது ஃபாக்ஸ்‌கான் நிறுவனம் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு செய்ய ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, “15,000 கோடி ரூபாய் முதலீடு மூலம் 14,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மையமாக மாறும் முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் படிக்க: பெற்றோருடன் தகராறு.. 10ம் வகுப்பு மாணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

திமுக அரசின் பொய்பிம்பங்கள் – அன்புமணி:


ஆனால், அன்புமணி ராமதாஸ் இதுகுறித்து தனது சமூக வலைத்தளப் பதிவில், “தமிழ்நாட்டில் 15,000 கோடி ரூபாய் புதிய முதலீடு செய்ய தைவானை சேர்ந்த ஃபாக்ஸ்‌கான் நிறுவனம் உறுதி அளித்திருப்பதாகவும் அதன் மூலம் வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என தமிழக அரசு பெருமையாக பேசும் நிலையில், அத்தகைய எந்த முதலீட்டையும் செய்வதாக ஃபாக்ஸ்‌கான் நிறுவனம் உறுதி அளிக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. தொழில் முதலீடுகள் விவகாரத்தில் திமுக அரசு எத்தகைய மோசடிகளை செய்து வருகிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு,” என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: முகாம் நடத்த பள்ளிக்கு விடுமுறை.. இந்த அகம்பாவம் திமுக அரசுக்கு எங்கிருந்து வருகிறது? – அண்ணாமலை காட்டம்..

அவர் மேலும், “திமுக அரசு கட்டி எழுப்பிய இந்த பொய்ப்பிம்பங்கள் அனைத்தும் அரை மணிநேரத்தில் உருகிவிட்டன. ஃபாக்ஸ்‌கான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக முதலமைச்சரை எங்கள் நிறுவன பிரதிநிதி சந்தித்தது உண்மை. ஆனால் அந்த சந்திப்பின் போது எந்த புதிய ஒப்பந்தம் குறித்தும் பேசப்படவில்லை; உறுதி அளிக்கப்படவில்லை,’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு’ என்று சொல்வார்கள். ஆனால் திமுக அரசின் புளுகு அரை நாளில் அம்பலமாகிறது,” என குறிப்பிட்டிருந்தார்.

நடிப்பவர்களுக்கு எதையும் சொல்ல முடியாது – அமைச்சர் டிஆர்பி ராஜா:


இதற்கு பதிலளிக்கும், அன்புமணி ராமதாஸின் இந்த குற்றச்சாட்டிற்கு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா விளக்கமளித்துள்ளார். தனது பதிவில், “ஒரு திட்டம் வேலை வாய்ப்புகளாக மாறும் என்ற அரசுக்கு முழுமையான நம்பிக்கை வந்த பிறகு, அதை துறை அல்லது நானோ உறுதி செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். நடப்பு உலகளாவிய வர்த்தக சூழல் தெரியாமல் யார் எதற்காக எதை சொல்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்து கொள்ள முடியாமல் அல்லது புரிந்து கொண்டே நடிப்பவர்களுக்கு நாம் எதையும் சொல்ல முடியாது,” என தெரிவித்துள்ளார். மேலும், “இந்த ஃபாக்ஸ்‌கான் நிறுவனம் தொடர்பான செய்தி 100 சதவீதம் உண்மையானது,” எனவும் குறிப்பிட்டுள்ளார்.