Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கரூர் கூட்ட நெரிசலுக்கு விஜய் தான் காரணம்.. சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு..

TN CM MK Stakin On Karur Stampede: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தாமதமாக வந்தது தான் கரூர் கூட்ட நெரிசலுக்கு காரணம் என சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கரூர் கூட்டநெரிசல் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என அதிமுகவினர் அமளியில் ஈடுபட்ட நிலையில் பேசியுள்ளார்.

கரூர் கூட்ட நெரிசலுக்கு விஜய் தான் காரணம்.. சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 15 Oct 2025 12:51 PM IST

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தாமதமாக வந்தது தான் கரூர் கூட்ட நெரிசலுக்கு காரணம் என சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அக்டோபர் 14 2025-ம் தேதியான நேற்று சட்டப்பேரவை கூட்டத்தொடரானது தொடங்கியது. இரண்டாவது நாளாக இன்று சட்டப்பேரவை கூடியது. இதில் கரூர் கூட்ட நெரிசல் மரணங்கள் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என அதிமுக எம்எல்ஏக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், “ தமிழக வெற்றி கழகம் சார்பில் அறிவிக்கப்பட்ட 12 மணியிலிருந்து கடந்து ஏழு மணி நேரம் தாமதமாக தலைவர் விஜய் வந்துள்ளார். இதுதான் அங்கு நடந்த கூட்ட நெரிசலுக்கான முக்கிய காரணம்”  என தெரிவித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல்:

செப்டம்பர் 27, 2025 அன்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கரூர் மற்றும் நாமக்கல் ஆகிய இரண்டு மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் முடித்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்திலேயே பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சுமார் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சோகம் நாட்டையே உலுக்கியது. அதனை தொடர்ந்து பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க:  கோயில் பூசாரி வெட்டிக் கொலை.. திருச்செந்தூரில் அதிர்ச்சி சம்பவம்!

குறிப்பாக, சமீபத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் உச்ச நீதிமன்றத்தில் இந்த கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு புலனாய்வு குழு தங்களது அனைத்து ஆவணங்களையும் சிபிஐக்கு ஒப்படைத்தது.

இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையில் அமலுக்கு இறங்கினர். இதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த சம்பவம் தொடர்பாக பேசியிருந்தார்.

குடிநீர் இன்றி தவித்த மக்கள் – முதல்வர் ஸ்டாலின்:

அப்போது அவர், “கரூர் பரப்புரைக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தாமதமாக வந்ததே இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணம்,” என குறிப்பிட்டார். மேலும் அவர், “கூட்ட ஏற்பாட்டாளர்கள் சில முக்கிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். ஆனால் கரூரில் அவை கடைபிடிக்கப்படவில்லை. உணவளிக்க எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. பல மணி நேரம் காத்திருந்த மக்களுக்கு போதிய குடிநீர் இல்லை. இயற்கை தேவைகளைச் சீரமைக்க பெண்களால் வெளியே செல்வதும் முடியவில்லை.

பொதுக்கூட்டங்களுக்கான நெறிமுறை கடைப்பிடிக்க வேண்டும்:

அதே இடத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு அதிமுக நடத்திய கூட்டத்தில் பங்கேற்றோர் முறையாக ஒருங்கிணைக்கப்பட்டிருந்தனர்; கட்டுப்பாட்டோடு நடந்து கொண்டனர். இதற்கே நேர்மாறாக தமிழக வெற்றி கழக கூட்டத்தில் நடந்துள்ளது. 50 ஆண்டுகால பொது வாழ்க்கையில் எத்தனையோ நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறேன், பார்த்திருக்கிறேன். இங்குள்ள அனைத்து அரசியல் இயக்கங்களையும் சேர்ந்தவர்களும் இத்தகைய அனுபவம் கொண்டவர்கள்தான். மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்துபவர்கள் அதற்குரிய சட்டம், திட்டம், நெறிமுறைகள் மற்றும் பொது ஒழுக்கங்களைப் பின்பற்றி நடத்த வேண்டும்; அப்படித்தான் நடத்த வேண்டும்,” என தெரிவித்தார்.

மேலும் அவர், “கரூரில் அதிகாரிகள் மற்றும் போலீசார் என மொத்தம் 606 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். வழக்கமாக அரசியல் பரப்புரை கூட்டங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு காவலர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் கரூர் பரப்புரையின் போது அதிகமாகவே பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும். கரூர் கூட்ட நெரிசல் போன்ற சம்பவங்கள் இனி நடைபெறக் கூடாது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் உறுதி ஏற்க வேண்டும்,” என குறிப்பிட்டார்.