த.வெ.க சார்பில் திருச்சி கிழக்கில் போட்டியிடும் ராகவா லாரன்ஸ்? முதல்வர் விஜய்யின் மாஸ்டர் பிளான்..
திருச்சி கிழக்கு தொகுதியில் யார் களம் இறங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், பிரபல நடிகரும் சமூக சேவகருமான ராகவா லாரன்ஸ், தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக போட்டியிடலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், இதுவரை இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
ஜூன் 3, 2026: தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் தற்போது 5 தொகுதிகள் காலியாக உள்ளன. இதில் முக்கியமாக, திருச்சி கிழக்கு தொகுதியில் யார் போட்டியிடப் போகிறார் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரு தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதையடுத்து, அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் காலியாக இருக்கும் 5 தொகுதிகள்:
இந்த நிலையில், இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், திருச்சி கிழக்கு தொகுதியில் நடிகரும் சமூக சேவகருமான ராகவா லாரன்ஸ், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலில், அந்த தொகுதியில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் போட்டியிடுவார் என தகவல்கள் வெளியானது. ஆனால், அதுகுறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும் படிக்க: காக்கி சட்டையில் ஒர் கருப்பு ஆடு.. புதுச்சேரியில் மனநலம் குன்றிய பெண் பாலியல் வன்கொடுமை.. இரவோடு இரவாக காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்!
அதேபோல், திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் யார் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் அதிகமாக இருந்தது. அந்த தொகுதியில் கூட்டணி கட்சி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடலாம் என்றும் தகவல்கள் வெளியானது.
ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன்பு இதுகுறித்து விளக்கம் அளித்த திருமாவளவன், திருச்சி கிழக்கு உட்பட எந்த இடைத்தேர்தலிலும் தான் போட்டியிடப் போவதில்லை எனத் தெளிவாக தெரிவித்தார். மேலும், அமைச்சரவையில் இடம்பெற தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் அதற்கு உடன்பாடு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
திருச்சி கிழக்கில் களம் இறங்கும் ராகவா லாரன்ஸ் ?
இந்த சூழலில், மீண்டும் திருச்சி கிழக்கு தொகுதியில் யார் களம் இறங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், பிரபல நடிகரும் சமூக சேவகருமான ராகவா லாரன்ஸ், தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக போட்டியிடலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும், அரசியலில் நேரடியாக களமிறங்குவது குறித்து தனது குருவான நடிகர் ரஜினிகாந்திடம் அவர் ஆலோசனை கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இதுவரை இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இருப்பினும், திருச்சி கிழக்கு தொகுதியில் ராகவா லாரன்ஸ் களமிறக்கப்படலாம் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.