கோயில்களில் தரிசனக் கட்டணம் உயர்வு? அமைச்சர் ரமேஷ் கொடுத்த அதிரடி விளக்கம்!
பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இந்தக் கட்டண உயர்வை ஏற்க மறுத்து, 'வேண்டாம்' என்று கருத்து தெரிவித்தால், எக்காரணம் கொண்டும் கட்டணங்கள் உயர்த்தப்பட மாட்டாது. மக்களின் கருத்துக்களைத் தாண்டி இந்த அரசு தன்னிச்சையாக எந்தவொரு முடிவையும் எடுக்காது. பொதுமக்கள் என்ன விரும்புகிறார்களோ, அதன்படியே இந்த அரசாங்கம் செயல்படும்" என்று திட்டவட்டமாகக் கூறினார்.
அறுபடை வீடுகளில் ஒன்றான புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தரிசன டிக்கெட் மற்றும் பிற சேவைகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாக சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பரவி வந்த தகவல்களுக்கு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். திருச்செந்தூர் கோவிலில் விஐபி தரிசனம், சிறப்பு தரிசனம் உள்ளிட்ட பல்வேறு தரிசன டிக்கெட்டுகளின் விலையை உயர்த்த கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்தன.
இதையும் படிக்க: திருச்செந்தூர் கோயிலில் சேவைக் கட்டணம் உயர்த்த முடிவு – எவ்வளவு தெரியுமா?
தரிசன டிக்கெட் கட்டண உயர்வு பின்னணி என்ன?
இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ரமேஷ் மிகத் தெளிவாக விளக்கமளித்தார். கோவில் நிர்வாகத்தில் கடந்த காலங்களில் சில முறைகேடுகள் மற்றும் முறையற்ற செயல்பாடுகள் நிலவி வந்தது அரசின் கவனத்திற்கு வந்தது. இதனை முறைப்படுத்தவும், நிர்வாகத்தை சீரமைக்கவும் கோவில் அதிகாரிகள் தரப்பில் சில ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் ஒரு பகுதியாக, கட்டணங்களை மாற்றி அமைப்பது குறித்து அதிகாரிகள் ஒரு திட்டத்தை பரிசீலித்து, அதற்கான முன்மொழிவை தயார் செய்து வைத்திருந்தனர். அதிகாரிகள் தரப்பில் கட்டண உயர்வு பரிசீலனையில் இருந்ததே தவிர, அரசு அதனைச் செயல்படுத்தவில்லை என்பதை அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கட்டண உயர்வு வதந்திக்கு முற்றுப்புள்ளி:
“திருச்செந்தூர் கோவிலில் தற்போது நடைமுறையில் உள்ள விஐபி தரிசனம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கட்டண சேவைகளுக்கு, பழைய கட்டணமேதான் தற்போதும் நீடிக்கிறது. விலையை உயர்த்திவிட்டதாகப் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் தவறானவை. அதிகாரிகள் திட்டமிட்டிருந்த கட்டண மாற்றங்கள் குறித்து, தற்போது பொதுமக்களிடமும் பக்தர்களிடமும் கருத்து கேட்கும் பணி மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது” என்று அமைச்சர் தெரிவித்தார்.
மக்களின் விருப்பமே இறுதி முடிவு:
பொதுமக்களின் உணர்வுகளுக்கு இந்த அரசு தரும் முக்கியத்துவத்தை அழுத்தமாகக் குறிப்பிட்ட அமைச்சர், “பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இந்தக் கட்டண உயர்வை ஏற்க மறுத்து, ‘வேண்டாம்’ என்று கருத்து தெரிவித்தால், எக்காரணம் கொண்டும் கட்டணங்கள் உயர்த்தப்பட மாட்டாது. மக்களின் கருத்துக்களைத் தாண்டி இந்த அரசு தன்னிச்சையாக எந்தவொரு முடிவையும் எடுக்காது. பொதுமக்கள் என்ன விரும்புகிறார்களோ, அதன்படியே இந்த அரசாங்கம் செயல்படும்” என்று திட்டவட்டமாகக் கூறினார்.
அடுத்த கட்ட அதிரடி நடவடிக்கைகள்:
கட்டண விவகாரம் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் ஆன்மீகத் துறையை மேம்படுத்த முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி எடுக்கப்பட்டு வரும் கூடுதல் நடவடிக்கைகளையும் அமைச்சர் பட்டியலிட்டார். அதன்படி, பல்லாண்டுகளாகத் தேங்கிக் கிடக்கும் ஆன்மீகத் துறை சார்ந்த பிரச்சனைகளையும், நிர்வாகத் குளறுபடிகளையும் சரிசெய்யக் கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது; அவை ஒவ்வொன்றாகத் தற்போது முறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க: அதிமுக – திமுக கவுன்சிலர்கள் மோதல்.. பறந்த பேப்பர்கள்.. களேபரமான சென்னை மாநகராட்சி கூட்டம்.. நடந்தது என்ன?
தமிழகத்தில் வழிபாடே இல்லாமல் முடங்கிக்கிடக்கும் மற்றும் இடிந்த நிலையில் சிதிலமடைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலங்களின் பட்டியல் தற்போது சேகரிக்கப்பட்டு வருகிறது. கண்டறியப்படும் இடிந்த நிலையிலுள்ள அனைத்துக் கோவில்களும் மாண்புமிகு முதலமைச்சரின் இந்த ஐந்தாண்டு கால ஆட்சிக்குள்ளாகவே முழுமையாகப் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, மீண்டும் பக்தர்களின் வழிபாட்டிற்குக் கொண்டு வரப்படும் என்றார்.