பராசக்தி படம் பார்த்து வேதனைப்பட்டேன் – நீதிபதி கருத்து – என்ன காரணம்?
Madras HC Judge : சென்னை தரமணியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தன் மகனுடன் பராசக்தி படம் பார்த்ததாகவும், அதனால் தான் வேதனையடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். அவர் பேசியது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை பிப்ரவரி, 2 : பராசக்தி திரைப்படத்தை பார்த்ததாகவும் தன் மனம் மிகவும் வேதனைப்பட்டதாகவும் உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை ,தரமணியில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் நடத்திய மூன்றாவது தேசிய குற்றவியல் விசாரணை போட்டி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மொழி கலாச்சாரம், சமூக பொறுப்பு குறித்து ஆழமான கருத்துக்களை முன்வைத்தார்.
பராசக்தி படம் தொடர்பாக நீதிபதி கருத்து
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், நான் என் மகனுடன் இணைந்து பராசக்தி திரைப்படத்தைப் பார்த்தேன். அதன் பிறகு வெளியே வந்தபோது, தமிழ்நாட்டில் நடந்த மொழிப்போர் குறித்து என் மகனிடம் கேள்வி எழுப்பினேன். ஆனால் என் மகனுக்கு அதை பற்றி தெரியவில்லை. அந்த தருணத்தில், மொழிப்போர் வரலாற்றை சொல்லித்தராத தந்தையாக நான் தோல்வியடைந்தேன். தமிழர்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் பிற மொழிகளை கற்றுக்கொள்வார்கள். ஆனால் என் மீது எந்தமொழியையாவது திணிக்க முயன்றால் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றார்.
இதையும் படிக்க : தைப்பூசத் திருவிழாவில் நடந்த சோகம்.. தேர் சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலி..




மேலும் பேசிய அவர், 3500 ஆண்டுகளைக் கடந்து காலத்துக்கும் நிலைத்து நிற்கும் ஒரு மொழி தமிழ். அதற்கு கீழடி அகழாய்வு ஆதாரமாக உள்ளது. உலகம் முழுவதும் இனம், மதம், ஜாதி, ஆகியவற்றின் பெயரால் மனிதநேயம் மறந்து பதற்றமான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சமூக விழிப்புணர்வு அவசியம். திருக்குறளில் எந்த மன்னரையும் புகழ்ந்து பேசவில்லை. எந்த மதத்தையும் உயர்த்தவில்லை. அது கடவுளை கூட முன்னிறுத்தவில்லை. அது மனித குலத்துக்கான ஒழுக்க நெறிகளை நமக்கு வழங்குகிறது என்றார்.
கம்யூனிசத்தை உணர வைத்த பாடல்
இறுதியாக பேசிய அவர் மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் என்ற பாட் கம்யூனிச கொள்கைகள் உள்ளிட்ட பல சிந்தனைகளை புரிந்துகொள்ள உதவியது என அவர் பேசினார். அவர் பேசியது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிக்க : தமிழகத்தில் இன்று இங்கு மழைக்கு வாய்ப்பு.. அடுத்த 6 நாட்கள் மழை நிலவரம்.. வானிலை ரிப்போர்ட்..
சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த ஜனவரி 10, 2026 அன்று பொங்கலை முன்னிட்டு வெளியான படம் பராசக்தி. சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படம் கடந்த 1960களில் நடந்த மொழிப்போர் தொடர்பான உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.