தைப்பூசத் திருவிழாவில் நடந்த சோகம்.. தேர் சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலி..
Tragedy at the Thaipusam festival: இவ்விழாவில் விருதுநகர், சிவகாசி, மதுரை, ராஜபாளையம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி கழுகாசல மூர்த்தி தரிசனம் செய்தனர். காலை 10 மணியளவில், பக்தர்கள் கயிறுகளைப் பிடித்து தேரை இழுத்தனர்.
தூத்துக்குடி, பிப்ரவரி 02: தூத்துக்குடி மாவட்ட தைப்பூசத்தையொட்டி, நடந்த தேர்த் திருவிழாவில் தேர் சக்கரங்களுக்கு அடியில் மரக்கட்டைகளை வைக்கும் பணிகளே மேற்கொண்ட ஒருவர் தேரின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் நேற்றைய தினம் தைப்பூசம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நேற்று காலை முதலே முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகங்களும், வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெற்றன. குறிப்பாக, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, மருதமலை, திருத்தணி, பழமுதிர்ச் சோலைகள் ஆகிய இடங்கள் தைப்பூசத்தை முன்னிட்டு விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது. இதையொட்டி, தமிழ்நாடு முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர்.
கழுகாசலமூர்த்தி கோவிலில் தைப்பூச விழா:
இவ்விழாவின் முக்கிய நிகழ்வான முருகன் தேரில் உலா வரும் நிகழ்வு பழமுதிர்ச் சோலை, பழனி உள்ளிட்ட பல முருகன் கோயில்களில் நேற்றைய தினம் நடைபெற்றது. அந்தவகையில், தென்பழநி என்று அழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம் கோலாகலமாக நடக்கும். தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலையில் உள்ள கழுகாசலமூர்த்தி கோவிலில் நேற்று தைப்பூசத் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.
தேரோட்ட விழா:
இவ்விழாவில் விருதுநகர், சிவகாசி, மதுரை, ராஜபாளையம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி கழுகாசல மூர்த்தி தரிசனம் செய்தனர். காலை 10 மணியளவில், பக்தர்கள் கயிறுகளைப் பிடித்து தேரை இழுத்தனர். காலை 11:30 மணியளவில், தேர் கழுகுமலையின் கீழ் பஜார் பகுதியை அடைந்தது. கழுகுமலை அருகே உள்ள கரடிகுளத்தைச் சேர்ந்த சப்பாணிமுத்து (70) என்ற தொழிலாளி, தேர் சக்கரங்களுக்கு அடியில் மரக்கட்டைகளை வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
தேர் சக்கரத்தில் சிக்கி பலி:
அப்போது, சப்பாணி திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில், தேரின் பின் சக்கரம் அவர் தலையின் மீது ஏறியது. இந்தச் சம்பவத்தில், சப்பாணிமுத்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தைக் கண்டு அங்கிருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, தேர் சிறிது தூரத்தில் நிறுத்தப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.