காதல் திருமணம்.. முதிய தம்பதியின் உருக்கமான முடிவு.. சென்னையில் சோகம்..
Tragedy incident in Chennai: நேற்று வெகுநேரம் ஆகியும் இவர்களது வீடு பூட்டியே இருந்தது. கணவன்-மனைவி இருவரும் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் அவர்களது வீட்டின் அருகில் வசிக்கும் பெண், சந்தேகத்துடன் கதவை தட்டியுள்ளார். அப்போது கதவு வெளிப்புறம் மட்டுமே புட்டியபடி இருந்துள்ளது.
சென்னை, பிப்ரவரி 16: சென்னை திருவொற்றியூர் அருகே பூட்டிய வீட்டுக்குள் வயதான தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, தற்கொலைக்கு முன்பு அவர்கள் எழுதிய உருக்கமான கடிதமும் போலீசார் வசம் சிக்கியது. குறிப்பாக, 40 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதி தனிமையில் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்குக்கு சொந்தங்களில் ஆதரவு முதுமையில் கூட கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. இவர்களின் இந்த முடிவுக்கு காரணம் என்ன என்பது குறித்து இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிக்க: பகலில் IT வேலை, சொகுசு வாழ்க்கை.. இரவில் வீடு வீடாக திருட்டு.. போலீசாருக்கு தண்ணி காட்டிய பலே கில்லாடி!!
காதல் திருமணம் செய்த தம்பதி:
சென்னை திருவொற்றியூர் சாத்துமா நகர் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தவர் குமார் (73). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கமலாதேவி (73). இருவரும் 40 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. பல்வேறு கனவுகளுடன் காதல் திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதி, வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் உறவினர்கள் யாரும் இவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது. இதனால், இருவரும் தனியாக வாடகை வீட்டில் வசித்தபடி, வாழ்க்கையை கழித்து வந்துள்ளனர்.
நிரிழிவு நோயால் அவதி:
இதனிடையே, கமலா தேவி, கடந்த 20 வருடங்களாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வலது கால் பாதம் முழுவதும் புண்ணாகி உள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்கள். இந்நிலையில், நேற்று வெகுநேரம் ஆகியும் இவர்களது வீடு பூட்டியே இருந்தது. கணவன்-மனைவி இருவரும் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் அவர்களது வீட்டின் அருகில் வசிக்கும் பெண், சந்தேகத்துடன் கதவை தட்டியுள்ளார். அப்போது கதவு வெளிப்புறம் மட்டுமே புட்டியபடி இருந்துள்ளது.
தம்பதி எடுத்த விபரீத முடிவு:
இதனால் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, வரவேற்பறையில் மின் விசிறி மாட்டும் கொக்கியில் குமார் தூக்கில் பிணமாக தொங்குவதையும், படுக்கை அறையில் கமலாதேவி இறந்து கிடப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது இடது கையை பிளேடால் கத்தியால் அறுத்து உள்ளார். இதனால் ரத்தம் வழிந்தபடி இருந்தது. இதுபற்றி தகவல் அறிந்துவந்த திருவொற்றியூர் போலீசார் 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிக்க: குடும்பத்தையே சீர்குலைத்த புற்றுநோய்.. மனைவி மீதான அதீத பாசத்தால் விபரீத முடிவு.. தந்தை, மகன் பலி!!
சிக்கிய உருக்கமான கடிதம்:
அப்போது வீட்டின் அறையில், தற்கொலைக்கு முன்பாக அவர்கள் எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அந்த கடிதத்தில், “எங்களுக்கு வரவேண்டிய சொத்தை உறவினர்கள் அபகரித்து கொண்டனர். எங்களுக்கு மருத்துவ உதவிக்கு கூட பணம் இல்லை. எங்கள் சாவுக்கு இவர்கள்தான் காரணம்” என்று கூறி 3 பேர் பெயரை குறிப்பிட்டு எழுதி வைத்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடிதத்தில் குறிப்பிட்டுள்ள 3 பேரையும் போலீஸ் நிலையம் வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)