நாளை அனுமன் ஜெயந்தி…நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1.08 லட்சம் வடை மாலை அணிவித்து வழிபாடு!
Hanuman Jayanti Worship Namakkal Anjaneyar Temple: நாளை அனுமன் ஜெயந்தியையொட்டி, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் 2.5 டன் அளவுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது . இதில், ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 08 வடைகளால் அலங்காரம் செய்யப்பட உள்ளது .
நாமக்கல் மாவட்டத்தில் உலகப் புகழ் பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டு தோறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நாளை வெள்ளிக்கிழமை ( டிசம்பர் 19 ) கொண்டாடப்பட உள்ளது. மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் அவதரித்ததாக ஐதீகம். அதன்படி, அன்றைய தினத்தை ஆஞ்சநேயர் ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நாமக்கல்லில் அமைந்துள்ள 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமிக்கு நாளை காலை பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது.
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1.08 லட்சம் வடைகளால் மாலை
இதை தொடர்ந்து, அதிகாலை 5 மணிக்கு 1 லட்சத்து 08 வடைகளால் அலங்காரம் செய்யப்படுகிறது. பின்னர், தீபாரதனை காண்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, பிற்பகல் ஒரு மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமிக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்படுகிறது. அப்போது, சுவாமிக்கு கற்பூர தீபாரதனை காண்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
மேலும் படிக்க: அனுமன் ஜெயந்தி 2025: வழிபடுவதற்கு சிறந்த நேரம் எது? எப்படி வழிபடுவது?
பக்தர்களுக்கு வடை மற்றும் பிரசாதம் அளிப்பு
இதைத் தொடர்ந்து, அனைத்து பக்தர்களுக்கு 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமிக்கு படைக்கப்பட்ட 1 லட்சத்து 08 வடைகள் மற்றும் புளியோதரை, சர்க்கரை பொங்கல் உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியையொட்டி, கோவில் முழுவதும் 2.5 டன் அளவுக்கு பல்வேறு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.
பெங்களூரில் இருந்து 2.5 கிலோ மலர்கள் கொள்முதல்
இதற்காக பெங்களூரில் இருந்து முஸ்கின் வையிட், பூர்ணிமா சாமந்தி, ஜிப்ஸி, ரோஜா கார்ணிஷன் உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. கோவில் வளாகத்தில் மலர் அலங்காரம் செய்யும் பணியில் கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவில் நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள்
ஆஞ்சநேயர் ஜெயந்திக்காக நாமக்கல் மாவட்டம் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கோவிலுக்கு வருகை தருவார்கள். இதற்காக, கோவில் நிர்வாகம் சார்பில், கோவில் வளாகம் முழுவதும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை, வாகன நிறுத்தும் இடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பாதுகாப்பு பணியில் போலீசார்
மேலும், நாமக்கல் காவல்துறை சார்பில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆஞ்சநேயர் ஜெயந்திக்காக அந்தப் பகுதிகளில் போலீசார் பேரிகார்டுகளை வைத்து போக்குவரத்தை சீரமைத்து வருகின்றனர். பாதுகாப்புக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் .
மேலும் படிக்க: சர்ச்சைக்குரிய திருப்பரங்குன்றம் மலை…சந்தனக்கூடு விழா நடத்த அனுமதி…இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு!



