கோவை தெற்கு தொகுதிக்கு குறி வைக்கும் செந்தில் பாலாஜி…என்ன காரணம்!
Senthil Balaji To Contest Covai South Constituency: கோவை தெற்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. எதற்காக அவர் சொந்த தொகுதி மற்றும் மாவட்டம் மாறி போட்டியிடப் போகிறார் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தமிழகத்தில் 2026 சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிட்டோமோ, அதே தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றும், வெற்றி பெற வேண்டும் என்றும் தீவிரமாக களப்பணி ஆற்றி வருகின்றனர். இதனால், 2026 சட்டமன்ற தேர்தல் களம் முன்பு இருந்ததை விட தற்போது படு வேகமாக சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. சில கட்சிகள் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சு வார்த்தை, மக்கள் சந்திப்பு பயணம், தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் என பல்வேறு பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றன.
கரூர் தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டியிடவில்லை
இந்த நிலையில், திமுகவில் கரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருக்கும் செந்தில் பாலாஜி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிடவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதே போல, கரூர் மாவட்டத்திலும் போட்டியிடவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது வேறு மாவட்டத்தில், வேறு தொகுதியில் போட்டியிட உள்ளாராம்.
மேலும் படிக்க: “தமிழகத்தை ஆளப்போவது விஜய்”.. செங்கோட்டையன் ஈரோட்டில் பேச்சு!




பணப் பரிவர்த்தனை வழக்கில் செந்தில் பாலாஜி கைது
திமுக ஆட்சியில் மின்சாரம் மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்து வந்த செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு ஆண்டுக்கு மேல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி சிறையில் இருந்து விடுதலை ஆனார். அதன் பிறகு, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
கோவை மேற்கு மண்ட பொறுப்பாளராக நியமனம்
தற்போது, கரூர் எம்எல்ஏ வாக இருந்து வரும் செந்தில் பாலாஜி கட்சி நிகழ்வுகளில் பெரிய அளவில் தலையிடாமல் இருந்து வந்தார். அண்மையில், கரூரில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்துக்கு பிறகு கட்சி நிகழ்வுகளில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே, செந்தில்பாலாஜி கோவை மேற்கு மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
கோவை தெற்கு தொகுதியில் போட்டி
அதன்படி, கோவையில் “என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி” என்பன உள்ளிட்ட கட்சி நிகழ்ச்சிகளில் செந்தில் பாலாஜி ஈடுபட்டு வருகிறார். அதன்படி, கோவையில் திமுகவின் பலத்தை வலுப்படுத்துவதற்காக கோவையின் தெற்கு தொகுதியில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.
வியூகங்களை வகுத்து வரும் செந்தில் பாலாஜி
இதற்காக, செந்தில் பாலாஜி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறாராம். இதனால், 2026 சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாக நம்பத் தகுந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க: “திமுக ஒரு தீய சக்தி.. TVK ஒரு தூய சக்தி” ஈரோட்டில் விஜய் ஆக்ரோஷம்!!