Year Ender 2025 : ஃபாஸ்டாக் வருடாந்திர பாஸ்… ஏஐ மூலம் சுங்க கட்டணம் வசூல் – இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்பான திட்டங்கள்
FASTag Key Changes: இந்த 2025 ஆம் ஆண்டு பயணிகள் ஒவ்வொரு முறையும் டோல் கட்டணம் செலுத்தும் வகையில் வருடாந்திர பாஸ் வசதியும், சுங்க சாவடிகளில் நின்று செல்வதை தவிர்க்கும் வகையில் ஏஐ மூலம் சுங்க கட்டணம் செலுத்தும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த 2025 ஆம் ஆண்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு பெரிய நன்மை தரும் வகையில், மத்திய அரசு ரூ.3000 மதிப்புள்ள புதிய வருடாந்திர ஃபாஸ்டாக் பாஸை அறிமுகம் செய்தது. இந்த புதிய திட்டம், சுங்கச் சாவடிகளில் அடிக்கடி கட்டணம் செலுத்த வேண்டிய சிரமத்தை குறைப்பதுடன், பயணச் செலவையும் கட்டுப்படுத்த உதவும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த ஃபாஸ்டாக் அடிப்படையிலான வருடாந்திர பாஸ், கடந்த 2025 ஆகஸ்ட் 15 முதல் அமலுக்கு வந்தது. இது முழுமையாக தனியார் மற்றும் வணிகம் சாராத வாகனங்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கார், ஜீப், வேன் போன்ற நான்கு சக்கர தனியார் வாகனங்கள் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும். லாரி, பேருந்து, வணிக வாகனங்களுக்கு இந்த வசதி பொருந்தாது.
ஃபாஸ்டாக்கின் வருடாந்திர பாஸ் விவரம்
அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இந்த பாஸ் செயல்படுத்தப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடம் அல்லது 200 பயணங்கள் முடியும் வரை செல்லுபடியாகும். இதில் எது முதலில் நிறைவடைகிறதோ, அதுவே பாஸின் காலவரம்பாக இருக்கும். அடிக்கடி தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இது மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.
இதையும் படிக்க : தங்கம் விலை உயர்வுக்கு இதுதான் காரணம்.. மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்!




மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, கடந்த ஜூன் 18, 2025 அன்று தனது சமூக வலைதள பதிவில் இந்த திட்டம் குறித்து அறிவித்தார். அவர் கூறுகையில், சுங்கச் சாவடிகளில் இடையூறுகள் இல்லாமல், எளிதாகவும், குறைந்த செலவிலும் பயணம் செய்ய இந்த பாஸ்டாக் வருடாந்திர பாஸ் உதவும் என தெரிவித்துள்ளார். மேலும், இந்த பாஸை செயல்படுத்தவும், புதுப்பிக்கவும் ராஜ்மார்க் யாத்ரா செயலி, அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தனி லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
ஃபாஸ்டாக் இல்லையென்றால் இரண்டு மடங்கு கட்டணம்
ஃபாஸ்டாக் இல்லாமல் கட்டணம் செலுத்தி பயணிப்பவர்கள், இனி அபராதமாக இரண்டு மடங்கு டோல் கட்டணம் செலுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் யுபிஐ போன்ற டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தினால், அந்த வாகனம் கூடுதலாக 25 சதவிகிதம் அதிகமாக பணம் செலுத்த வேண்டியிருக்கும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதையும் படிக்க : Year Ender 2025 – இனி ஆதார் கார்டு தேவையில்லை – புதிய ஆதார் ஆப்பில் என்ன ஸ்பெஷல்?
ஏஐ மூலம் சுங்க கட்டணம் வசூல்
சுங்கச்சாவடிகளில் இனி கட்டணங்களை விரைவாகவும் எளிமையாகவும் மாற்ற செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி கட்டணம் வசூலிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். எம்எல்எஃப் என்ற செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்துமாறு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்ற அவர், இதனால் வாகனங்கள் டோல் கேட்டில் நின்று பயணிக்க தேவையில்லை. 80 கி.மீ வேகத்தில் கூட பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்படும் என்றார்.