தம்பி மரணத்துக்கு பழிக்குப்பழி.. இளைஞர் தலை துண்டித்து கொலை!
Trichy Crime News: திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா ஆலத்துடையான்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் என்ற கூலித் தொழிலாளி தலையைத் துண்டித்து கொலை செய்யப்பட்டார். கடந்த ஆண்டு சேலத்தில் தனது தம்பியைக் கொலை செய்ததாக பழிவாங்கும் நோக்கில், கல்பேஷ் மற்றும் அஸ்வின் குமார் ஆகியோர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது.

திருச்சி, செப்டம்பர் 4: திருச்சி மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் தலைதூண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த மாவட்டத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பது பற்றி காணலாம். திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் தாலுகாவில் ஆலத்துடையான்பட்டி என்ற கிராமம் உள்ளது. இங்கு சுரேஷ் என்ற கூலி தொழிலாளி தனது மனைவி மாதவி மற்றும் மகள் அர்ச்சனாவுடன் வசித்து வந்தார். மாதவியின் தாய் பாப்பம்மாள் வீடு தொட்டியத்தை அடுத்துள்ள முள்ளிப்பாடி கிராமத்தில் இருக்கும் காலனி தெருவில் உள்ளது. கடந்த நான்கு மாதங்களாக சுரேஷ் தனது மனைவி மற்றும் மகளுடன் இங்கு தங்கி இருந்து வேலைக்கு சென்று வருகிறார்.
தலை துண்டித்து கொலை
இப்படியான நிலையில் 2025 செப்டம்பர் 2ம் தேதி இரவு முள்ளிப்பாடி பேருந்து நிறுத்தம் அருகே சுரேஷ் நின்று கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், தொடர்ந்து அந்த மர்ம நபர்கள் சுரேஷின் தலையை துண்டித்து எடுத்துச் சென்றனர், இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மகனுக்கு பிறந்தநாள் பரிசு வழங்குவதில் வாக்குவாதம்.. மனைவி, மாமியாரை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த நபர்!
சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி மாவட்ட காவல்துறையினர் சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அப்பகுதி முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட நிலையில் முள்ளிப்பாடி ஏரி அருகே ஒளிந்திருந்த இரண்டு இளைஞர்களை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இருவரும் ஆலத்துடையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி கல்பேஷ் மற்றும் அஸ்வின் குமார் என்ற படையப்பா என தெரிய வந்தது.
தம்பி கொலைக்கு பழிக்குப்பழி
இதனை தொடர்ந்து ஏரியில் வீசப்பட்ட சுரேஷின் தலையை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் இருவரையும் கைது செய்து காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் சுரேஷ் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக முள்ளிப்பாடி கிராமத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இதில் கல் பேஸ் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது கடந்த ஆண்டு சேலத்துக்கு கூலி வேலைக்கு சென்ற போது சுரேஷ் மற்றும் சிலர் சேர்ந்து எனது தம்பி தியாகராஜனை முன்விரோதம் காரணமாக கொலை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் காவல்துறையினர் சுரேஷ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதன்பின்னர் சுரேஷ் ஜாமினில் வெளியே வந்தார்.
இதையும் படிங்க: நண்பனை போல் பழகிய ஏஐ செய்த காரியம்.. தாயை கொன்ற முன்னாள் யாகூ மேனேஜர் தற்கொலை.. என்ன நடந்தது?
நேற்றுமுன்தினம் தியாகராஜன் பிறந்தநாளாகும். எனவே தம்பி கொலைக்கு பழிக்குப்பழி வாங்க திட்டமிட்டு சுரேஷின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தேன். முள்ளிப்பாடி பேருந்து நிறுத்தம் அருகே அவர் தனியாக நின்று கொண்டிருப்பதை அறிந்து எனது நண்பர் அஸ்வின் குமாருடன் அங்கு சென்றேன். பின்பு சுரேஷை கொலை செய்து விட்டு ஆத்திரம் அடங்காததால் அவரது தலையை துண்டித்து அங்கிருந்து தப்பிச் சென்றேன். ஆனால் போலீசார் என்னை கைது செய்து விட்டனர் என கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.