தமிழகத்தில் இடைக்கால பட்ஜெட்?..எப்போது தாக்கல் செய்யலாம்…அரசு தீவிர ஆலோசனை!
Tamil Nadu Interim Budget: தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், அடுத்த மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக 4 நாள்கள் பேரவையை நடத்தி முடிக்க உள்ளனராம்.
2026- ஆம் ஆண்டின் தமிழக சட்டப் பேரவையின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி 20- ஆம் தேதி ( செவ்வாய்க்கிழமை) தொடங்கி 24- ஆம் தேதி (சனிக்கிழமை) வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஆளுநர் உரை நிகழ்ச்சி, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்எல்ஏக்கள் விவாதம் நடத்தினர். இறுதியாக இதற்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் பதிலளித்து பேசி இருந்தார். இதைத் தொடர்ந்து, தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக சட்டப் பேரவை தலைவர் மு. அப்பாபு அறிவித்தார். இந்த நிலையில், திமுக அரசின் பதவிக் காலம் நிறைவடைய உள்ளது. இதனால், தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரை தொடங்கி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
பிப்ரவரி மாதத்தில் பட்ஜெட் தாக்கல்?
அதன்படி, தமிழகத்துக்கான இடைக்கால பட்ஜெட் அடுத்த மாதம் பிப்ரவரி 13 அல்லது 14- ஆம் தேதி தாக்கல் தாக்கல் செய்யலாமா? என்று ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், பிப்ரவரி 3- ஆம் வாரத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து 4 நாட்கள் சட்டப்பேரவையே நடத்தி முடிக்கலாமா? என்றும் ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் வாக்காளர்களை கவரும் வகையில், இந்த இடைக்கால பட்ஜெட்டை திமுக அரசு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு உள்ளது.
மேலும் படிக்க: பாஜக – அதிமுக வலுவான கூட்டணி.. திமுகவுக்கு சவாலாக உருவெடுக்கும் என்டிஏ




இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டம்?
எனவே, இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாகும். ஆனால், தற்போது திமுக அரசின் ஆட்சி காலம் முடிவடைந்து, சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் மார்ச் மாதத்தில் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். இந்த சூழலால் பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாத நிலை உள்ளது.
அரசியல் பரபரப்புக்கு பஞ்சமின்றி…
இதனால், பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அதுவும், இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் களம் பரபரப்பாக இருக்கும் சூழ்நிலையில், தற்போது பட்ஜெட் கூட்ட தொடர் தொடங்க இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த கூட்டத் தொடரில் அரசியல் கட்சிகளின் வார்த்தை போர்கள் விறுவிறுப்பாகவும், அரசியல் பரபரப்புக்கு பஞ்சமின்றியும் இருக்கும்.
மேலும் படிக்க: நிர்வாகிகளுடன் ஆலோசனை.. யாருடன் கூட்டணி? இன்று அறிவிக்கும் ஓபிஎஸ்