“திமுக எந்த கட்சியை கூட்டணியில் சேர்த்தாலும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம்”.. திருமாவளவன்
Thirumavalavan; 1965 காலகட்டத்தில் இந்தியை ஒரு கட்டாயப் பாடமாக்குவதை ராஜேந்திரன் போன்றவர்கள் எதிர்த்திருக்காவிட்டால், அவர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்து ரத்தம் சிந்தி இருக்காவிட்டால், இன்று நாம் அனைவரும் இந்தி பேசும் மக்களாக மாறியிருப்போம் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சிதம்பரம், ஜனவரி 28: திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இணைய வேண்டும் என்பதை திமுக தலைமை மட்டுமே முடிவு செய்ய வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். நேற்று மாலை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள மொழிப்போர் தியாகி ராஜேந்திரனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பேசியதாவது, தற்போது நாம் இருமொழிக் கொள்கையின்படி தமிழையும் ஆங்கிலத்தையும் படித்து வருகிறோம் என்றார்.
மேலும் படிக்க: சூடுபிடிக்கும் அரசியல் களம்.. பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 234 தொகுதிகளிலும் திமுக பரப்புரை..
இந்தி பேசும் மக்களாக மாறியிருப்போம்:
தொடர்ந்து, பேசிய அவர், 1965 காலகட்டத்தில் இந்தியை ஒரு கட்டாயப் பாடமாக்குவதை ராஜேந்திரன் போன்றவர்கள் எதிர்த்திருக்காவிட்டால், அவர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்து ரத்தம் சிந்தியிருக்காவிட்டால், இன்று நாம் அனைவரும் இந்தி பேசும் மக்களாக மாறியிருப்போம். வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று ஆசை காட்டி இந்தியை நம்மைப் படிக்க வைக்க அவர்கள் முயன்றதற்குக் காரணம், நாம் இந்தி கற்றுக்கொண்டால், நம்மை எளிதில் ஏமாற்றிவிடலாம் என்பதுதான்.
தமிழ் படிப்படியாகப் புறக்கணிக்கப்பட்டிருக்கும்:
மேலும், அந்த மொழி இங்கு வந்திருந்தால், நாம் பெரும்பாலும் இந்திப் பாடங்களையே கேட்டிருப்போம். தமிழ்ப் பாடங்களைக் கேட்டிருக்க மாட்டோம். இந்தி இங்கு வந்திருந்தால், தமிழ் படிப்படியாகப் புறக்கணிக்கப்பட்டிருக்கும். தமிழர்களுக்கு 1000 ஆண்டுகளாக இருந்து வரும் பாரம்பரியம் மெதுவாக அழிக்கப்பட்டிருக்கும். நாம் இந்தி மட்டுமே பேசும் மக்களாக மாறியிருப்போம். தமிழ் வெறும் பேச்சு மொழியாக மாறியிருக்கும். அனைத்துத் துறைகளிலும் இந்தி ஆதிக்கம் செலுத்தியிருக்கும் என்றார்.
கூட்டணியை திமுக தலைமையே முடிவு செய்யும்:
இதனிடையே, கடலூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இணைய வேண்டும் என்பதை திமுக தலைமை மட்டுமே முடிவு செய்ய வேண்டும். எந்தக் கட்சியை கூட்டணியில் சேர்க்க வேண்டும், எதைச் சேர்க்கக் கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுகவிடம் கூறாது. அவ்வாறு செய்வதற்கு எங்களுக்கு எந்த அதிகாரமும் உரிமையும் இல்லை.
மேலும் படிக்க: த.வெ.க உடன் கூட்டணி அமைக்காதது ஏன்? இது தான் உண்மையான காரணம் – மனம் திறந்த டிடிவி தினகரன்..
கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம்:
திமுக விரும்பும் எந்தக் கட்சியையும் கூட்டணியில் சேர்த்துக்கொள்ளலாம். அதற்கு நாங்கள் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்க மாட்டோம். எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதைத் தவிர, திமுகவுக்கு ஆலோசனை சொல்லவோ அல்லது அழுத்தம் கொடுக்கவோ நாங்கள் எந்த நிலையிலும் இல்லை. எந்தக் கட்சி மீதும் எங்களுக்குத் தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.