Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முற்றும் திமுக – காங்., மோதல்.. ராகுல் காந்தியை சந்திக்கும் கனிமொழி..

DMK-Congress conflict: கனிமொழி, ராகுல் காந்தி சந்திப்பு மூலம் கூட்டணி குறித்த சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று தெரிகிறது. அதோடு, திமுக தரப்பில் பிப்ரவரி 3ம் தேதி முதல் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

முற்றும் திமுக – காங்., மோதல்.. ராகுல் காந்தியை சந்திக்கும் கனிமொழி..
கோப்புப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 28 Jan 2026 12:39 PM IST

டெல்லியில் இன்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கேவை திமுக எம்.பி கனிமொழி சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை டிசம்பர் 3ம் தேதியே தான் சந்தித்ததாகவும், டிச.15ம் தேதிக்குள் கூட்டணியை இறுதி செய்ய வேண்டும் என கோரியிருந்தாகவும் தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். அதோடு, திமுகவின் முடிவுக்கு காத்திருப்பதாக தெரிவித்திருந்தார். இதன் மூலம் காங்கிரஸ் மேலிடம் தொடர்ந்து, திமுகவின் பதிலுக்காக மட்டுமே காத்திருப்பது தெரியவருகிறது. அதேசமயம், தமிழக நிர்வாகிகள் நடவடிக்கை பல்வேறு சந்தேகங்களை கிளப்பும் வகையில் அமைந்துள்ளது.

மேலும் படிக்க: “திமுக எந்த கட்சியை கூட்டணியில் சேர்த்தாலும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம்”.. திருமாவளவன்

தவெகவுடன் கூட்டணி அமைக்க விருப்பம்:

இதன் மூலம் திமுக கூட்டணியில் கடந்த தேர்தல்களில் அங்கம் வகித்த காங்கிரஸ், இம்முறை கூட்டணியைத் தொடருமா? அல்லது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணிக்குச் செல்லுமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் நிலவுகிறது. ஏனெனில், தமிழகத்தில் காங்கிரஸ் எம்.பிக்கள் ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் வெளிப்படையாகவே ஆட்சியில் அதிகாரம் கேட்டு, கருத்து தெரிவித்து வருகின்றனர். அதோடு, திமுக கூட்டணிக்கு எதிராகவும், விஜய்க்கு ஆதரவாகவும் பல்வேறு கருத்துகளை கூறி, சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டணி பற்றி பேச தடை:

இதைத்தொடர்ந்து, சில நாள்களுக்கு முன்னதாக, டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணி குறித்து யாரும் பொதுவெளியில் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டது. எனினும், அதனை பின்பற்றாமல் அக்கட்சி நிர்வாகிகள் பலரும் தங்களது கருத்துகளை தொடர்ந்து பகிர்ந்து குழப்பம் ஏற்படுத்தி வருகின்றனர். இது, திமுகவினர் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்திய நிலையில், சமீப காலமாக அவர்களும் இதற்கு எதிர்வினையாற்றும் வகையில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

திமுக நிர்வாகிகள் கூட்டணி பற்றி பேச தடை:

அப்படி, மதுரை வடக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தளபதி, காங்கிரஸ் தலைவர்களை விமர்சித்துப் பேசினார். அதாவது, திமுக இல்லையென்றால் டெல்லியில் ‘இந்தியா’ கூட்டணியே கிடையாது. திமுக தலைமை காங்கிரஸ்க்கு சீட் கொடுக்ககூடாது, கொடுத்தாலும் நம்ம ஆட்கள் காங்கிரஸை தோற்கடிக்க வேண்டும் என்ற தொனியில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். அவரது பேச்சிற்கு, காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர் மற்றும் ஜோதிமணி ஆகியோர் பதிலடி கொடுத்தனர். அதாவது, இந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிற்க வேண்டும் என்றும், தன்மான காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றும் முறைமுகமாக கூறியிருந்தனர்.

முற்றும் திமுக – காங்., மோதல்:

இதைத்தொடர்ந்து, கூட்டணி தொடர்பான விஷயங்கள் குறித்துப் பொதுவெளியில் பேசுவதற்கு திமுக நிர்வாகிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. இவ்வாறு, தேர்தல் நெருங்கும் சமயத்தில் கூட்டணி கட்சிகள் இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் எல்லாம், இந்த முறை கூடுதல் தொகுதிகளை கேட்டுப்பெறுவோம் என்று கூறிவருகின்றன. ஆனால், வெளிப்படையாக இன்னும் தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை தொடங்கப்படவில்லை.

மேலும் படிக்க: சூடுபிடிக்கும் அரசியல் களம்.. பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 234 தொகுதிகளிலும் திமுக பரப்புரை..

ராகுலை சந்திக்கும் கனிமொழி:

இந்நிலையில், இன்று டெல்லி செல்லும் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கேவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரு கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சு விரைவில் தொடங்க உள்ள நிலையில், இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. இந்த சந்திப்பு மூலம் கூட்டணி குறித்த சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று தெரிகிறது. அதோடு, திமுக தரப்பில் பிப்ரவரி 3ம் தேதி முதல் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.