தஞ்சாவூர் ஜனவரி 28 : தஞ்சாவூர் (Thanjavur) மாவட்டம் கும்பகோணத்தில் ஜனவரி 28, 2026 அன்று நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பினராக கலந்துகொண்டார். நிகழ்வில் பேசிய அவர், இஸ்லாமிய சமூகத்துக்காக 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். மேலும் பேசிய அவர், கலைஞர் ஒருபோதும் இஸ்லாமியர்களை வேறுபடுத்திப் பார்த்ததில்லை. அதே பாதையில் நானும் இஸ்லாமிய மக்களுக்காக செயல்பட்டு வருகிறேன். வழிபாட்டு தலங்கள் என்பது பிரார்த்தனைக்கு மட்டுமல்ல, சமூக ஒற்றுமைக்கும் அடையாளமாக உள்ளன என்று தெரிவித்தார். அவர் பேசியது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
இஸ்லாமியர்களுக்கு தமிழக முதல்வர் வெளியிட்ட 5 அறிவிப்புகள்
- அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐந்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். முதற்கட்டமாக, தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட 1,537 உலமாக்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியம் ரூ.3,000 இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்படுவதாகவும், மேலும் 44 குடும்பங்களுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் ரூ.1,500 இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்படுவதாகவும் அறிவித்தார்.
இதையும் படிக்க : முற்றும் திமுக – காங்., மோதல்.. ராகுல் காந்தியை சந்திக்கும் கனிமொழி..




- இரண்டாவது அறிவிப்பாக, உலமா நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட 15,520 உலமாக்களில் முதல் கட்டமாக 1,000 உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க வழங்கப்படும் அரசு மானியம் ரூ.25,000 இருந்து ரூ.50,000 ஆக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
- மூன்றாவது அறிவிப்பாக, தற்போது சென்னை மற்றும் மதுரையில் செயல்பட்டு வரும் வக்ஃபு தீர்ப்பாயங்களுக்கு கூடுதலாக, கோயம்புத்தூர் மாவட்டத்தில் புதிய வக்ஃபு தீர்ப்பாயம் அமைக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார்.
- நான்காவது அறிவிப்பில், கல்லறை மற்றும் அடக்கம் செய்யும் இடங்கள் இல்லாத பகுதிகளில், மாநகராட்சிகளுக்கு சொந்தமான அரசு நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு கல்லறை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
- ஐந்தாவது மற்றும் முக்கியமான அறிவிப்பாக, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 10 உருது ஆசிரியர் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநாட்டில் முதல்வர்
தமிழ்நாட்டில் மதநல்லிணக்கம் காக்கப்பட, சிறுபான்மையினர் தொடர்ந்து சம உரிமையுடன் வாழ 2026 தேர்தலில் NDA வீழ்த்தப்பட வேண்டும்#CAA, முத்தலாக் தடைச் சட்டம், #WaqfAmendmentBill, #SIR எனச் சிறுபான்மையினருக்கு எதிரான துரோகப் பட்டியல் நிறைந்ததுதான் NDA கூட்டணி.
ஒன்றிய அரசின் சதித்… pic.twitter.com/AM9YSxkpmk
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) January 28, 2026
இதையும் படிக்க : “திமுக எந்த கட்சியை கூட்டணியில் சேர்த்தாலும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம்”.. திருமாவளவன்
இந்த அறிவிப்புகள், முஸ்லிம் சமூகத்தின் கல்வி, சமூக பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக மாநாட்டில் பங்கேற்றவர்கள் வரவேற்பு தெரிவித்தனர். மேலும், திராவிட மாடல் ஆட்சியின் சமூக நீதி கொள்கைகளை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளாக இந்த அறிவிப்புகள் பார்க்கப்படுகின்றன.