சென்னையில் நாளை நடக்கும் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. ஆலோசிக்கப்படும் முக்கிய விஷயங்கள் என்ன?
TVK Meet: இந்த நிலையில், நாளைய தினம் மாலை 4 மணி அளவில், சென்னை ராயப்பேட்டை YMCA கன்வென்ஷன் சென்டரில், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சாரக் குழு உறுப்பினர்கள் மற்றும் சென்னை மாவட்ட கழகச் செயலாளர்கள் கலந்து கொள்ளும் ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை, ஜனவரி 27, 2026: வரக்கூடிய ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் நான்குமுனை போட்டி நிலவி வருகிறது. அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இதில் இடம்பெற்றுள்ளன. சட்டமன்றத் தேர்தலை முதல் முறையாக தமிழக வெற்றிக் கழகம் சந்திக்க உள்ளது. இதற்கான அனைத்து பணிகளும் மும்மரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சட்டமன்ற தேர்தலை சந்திக்க ஆயத்தமாகும் தவெக:
சமீபத்தில் தேர்தல் ஆணையம் தரப்பில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு பொதுச் சின்னமாக “விசில்” சின்னம் ஒதுக்கப்பட்டது. ஏற்கனவே அவர்கள் தேர்தல் ஆணையத்தில் கேட்டுக்கொண்டபடியே அந்தச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜனவரி 28, 2026 தேதியான நாளை, சென்னையில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற இருப்பதாக கட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் தேர்தலுக்கான பணிகள் குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தமிழகத்தில் முதல் முறையாக “உலகளாவிய சுற்றுலா மாநாடு”…அடுத்த மாதம் நடக்கிறது..எங்கு தெரியுமா!
தமிழக வெற்றிக் கழகத்தைப் பொறுத்தவரையில், தற்போது வரை எந்தக் கட்சியும் கூட்டணி அமைக்கவில்லை. 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என கட்சி தலைவர் விஜய் குறிப்பிட்டிருந்த நிலையிலும், தற்போது வரை எந்தக் கட்சியும் கூட்டணிக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நட்பு சக்தி இல்லாவிட்டாலும் வெற்றி நிச்சயம்:
பிறந்த நாட்களுக்கு முன்பு மாமல்லபுரத்தில், கட்சி தலைவர் விஜய் தலைமையில், மாநில மற்றும் மாவட்ட அளவிலான கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தலைவர் விஜய் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். குறிப்பாக, “அழுத்தம் இருக்கிறது; ஆனால் அந்த அழுத்தம் நமக்கு இல்லை, மக்களுக்கு இருக்கிறது. மாற்றி மாற்றி ஏமாந்த மக்கள் அழுத்தத்தில் இருக்கிறார்கள். TVK-வை மக்கள் நம்புகிறார்கள். நட்பு சக்தி இருந்தாலும் இல்லாவிட்டாலும் தனியாக நின்று வெற்றி அடைவோம். ஆளுங்கட்சி மற்றும் ஆண்ட கட்சிக்கு ‘பூர்த்தி’ என்றால் என்ன தெரியுமா? கள்ள ஓட்டு போடுவது. நடைபெற உள்ள தேர்தல் ஒரு ஜனநாயகப் போர். இந்த ஜனநாயகப் போரில் முன்னிலையில் நிற்கக்கூடிய நீங்கள் தான் தளபதிகள்,” என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் படிக்க: த.வெ.க உடன் கூட்டணி அமைக்காதது ஏன்? இது தான் உண்மையான காரணம் – மனம் திறந்த டிடிவி தினகரன்..
சென்னை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்:
(2/2) pic.twitter.com/Dk3GiMQHzZ
— TVK Party HQ (@TVKPartyHQ) January 25, 2026
இந்த நிலையில், நாளைய தினம் மாலை 4 மணி அளவில், சென்னை ராயப்பேட்டை YMCA கன்வென்ஷன் சென்டரில், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சாரக் குழு உறுப்பினர்கள் மற்றும் சென்னை மாவட்ட கழகச் செயலாளர்கள் கலந்து கொள்ளும் ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படும் எனவும், அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் எனவும் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நெருங்கும் சூழலில்,
-
பரப்புரை மேற்கொள்வது,
-
பூத் கமிட்டி மற்றும் ஏஜென்ட்கள் அமைப்பது,
-
கள நிலவரம் எப்படி உள்ளது,
-
எந்தெந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது,
-
எந்த தொகுதிகள் பலவீனமாக உள்ளன,
-
மக்களிடம் எவ்வாறு வாக்கு கேட்க வேண்டும்,
-
என்ன மாதிரியான முன்னேற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும்
உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.