கழன்று ஓடிய அரசு பேருந்தின் பின் பக்க டயர்… சாலையோர பளத்தில் கழிந்து விபத்து – 20க்கும் மேற்பட்டோர் காயம்
Government Bus Accident : மதுரை சமயநல்லூர் அருகே பழனி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் டயர் வெடித்த நிலையில் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

டயர் வெடித்து பேருந்து விபத்து
மதுரை, ஜனவரி 19 : மதுரை (Madurai) சமயநல்லூர் அருகே அரசு பேருந்தின் டயர் கழன்று விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர். மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து பழனி (Palani) நோக்கி 55 பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்திருக்கிறது. இந்த பேருந்து மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே கட்டக்குழி என்ற ஊரில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது பேருந்தின் டயர் வெடித்து கழன்று சென்றிருக்கிறது. இந்த நிலையில் டிரைவர் திடீரென பிரேக் பிடித்ததில் பேருந்து நிலை தடுமாறி அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்திருக்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதித்துள்ளது.
கழன்று ஓடிய அரசு பேருந்தின் பின்பக்க டயர்
இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்திருக்கின்றனர். அப்பகுதி மக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவர்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த சமயநல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பேருந்தை பள்ளத்தில் இருந்து மீட்டனர்.
இதையும் படிக்க : முடிந்தது விடுமுறை.. 20 கி.மீ வரை அணிவகுத்து நின்ற வாகனங்கள்.. ஸ்தம்பித்த சென்னை..
மேலும், விபத்துக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்தின் டயர் ஏற்கனவே மோசமான நிலையில் இருந்திருக்கிறது இந்த நிலையில் பேருந்தை அதிவேகமாக இயக்கியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இந்த பேருந்து விபத்து காரணமாக மதுரை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது பேருந்து அங்கிருந்த அகற்றப்பட்டவுடன் போக்குவரத்து சீரானது.
பேருந்தின் டயர் வெடித்து விபத்து
இது போன்ற கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பரில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி அரசு விரைவுப் பேருந்து ஒன்று கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அதன் முன்பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனையடுத்து பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புகளை உடைத்து எதிர்திசையில் திருச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார்களில் பயணித்த 7 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
இதையும் படிக்க : அதிகரிக்கும் பகல் நேர வெப்பநிலை.. அதிகாலையில் நிலவும் பனிமூட்டம் – வானிலை ரிப்போர்ட்..
கடந்த சில மாதங்களாக அரசு பேருந்துகள் தொடர்ந்து விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் உயிரிழப்புகளும் அவ்வப்போது ஏற்பட்டு வருகின்றன. பேருந்துகளை முறையாக பராமரிக்கப்படாததே இந்த விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.