பொங்கல் நீச்சல் போட்டி… குழந்தைகள் கண்முன்னே தந்தை உயிரிழந்த சோகம்
Swimming Competition Tragedy: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற நீச்சல் போட்டியில் குழந்தையின் கண்முன்னே தந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நீச்சல் போட்டியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக கடைபிடிக்காததே இளைஞரின் மரணத்துக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தஞ்சாவூர், ஜனவரி 18 : பொங்கலை (Pongal) முன்னிட்டு பெரும்பாலான ஊர்களில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் (Thanjavur) மாவட்டத்தில் பொங்கல் விழா கொண்டாட்டத்தின் போது நடைபெற்ற நீச்சல் போட்டியில், தனது குழந்தைகள் கண் முன்னே தந்தை ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஆனைக்காடு பகுதியில், பொங்கல் விழாவை முன்னிட்டு அந்த ஊரில் உள்ள குளத்தில் நீச்சல் போட்டி நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். இந்த போட்டியில், கூலி தொழிலாளியான மணிகண்டன் என்பவரும் கலந்து கொண்டார்.
குழந்தைகள் கண் முன்னே தந்தை பலி
போட்டி தொடங்கியதும், போட்டியாளர்கள் அனைவரும் குளத்தின் மறுகரையை நோக்கி வேகமாக நீந்த தொடங்கினர். அப்போது எதிர்பாராத விதமாக, மணிகண்டன் குளத்தின் அடிப்பகுதியில் இருந்த சேற்றில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் இதனால் நீரில் மூழ்கிய அவர் வெளியே வரமுடியாமல் தவித்திருக்கிறார். இந்த சம்பவம் நடைபெறும் நேரத்தில், அவரது குழந்தைகள் குளத்தின் மறுகரையில் நின்று தங்கள் தந்தையை உற்சாகப்படுத்திக் கொண்டு கைத்தட்டியபடி பார்த்துக் கொண்டிருந்தனர். தந்தைக்கு ஏற்பட்ட அபாயத்தை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
இதையும் படிக்க : சென்னை உலா பேருந்து…நேர அட்டவணை-பயணிக்கும் வழித்தடம் வெளியீடு!




போட்டி நடைபெற்ற வேகத்தில் முதலில் மணிகண்டனை யாரும் கவனிக்கவில்லை. சிறிது நேரத்திற்கு பிறகு, மணிகண்டன் நீரில் மூழ்கியதை கவனித்த சக போட்டியாளர்கள் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால், அதற்குள் அவர் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி தெரிய வந்ததும், அவரது குடும்பத்தினர் கதறி அழுத காட்சிகள் அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தின. பொங்கலை முன்னிட்டு மகிழ்ச்சியாக நடந்த நீச்சல் போட்டியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றாததது தான் இளைஞர் மரணத்துக்கு காரணமா?
இந்த நீச்சல் போட்டி எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி நடத்தப்பட்டதே இந்த விபத்துக்குக் காரணம் என கூறப்படுகிறது. பாதுகாப்பு பணியாளர்கள், மீட்பு உபகரணங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததா, யாருடைய தலைமையில் இந்த போட்டி நடைபற்றது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிக்க : குன்னூர் அருகே திடீர் மண் சரிவு.. 3 தொழிலாளர்கள் பரிதாபமாக பலி.. பெரும் சோகம்..
பொங்கல் போன்ற திருவிழாக்களில் நடைபெறும் விளையாட்டு போட்டிகள் பாதுகாப்பு விதிமுறைகளுடன் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை இந்த சம்பவத்தால் மீண்டும் வலுப்பெற்றுள்ளது. இல்லையென்றால் மகிழ்ச்சிக்காக நடத்தப்படும் இதுபோன்ற போட்டிகள் சோகத்தில் முடிவடைய வாய்ப்பிருக்கிறது.