பொங்கல் பண்டிகை எதிரொலி : சென்னை கடற்கரைகளில் 233 மெட்ரிக் கழிவுகள் அகற்றம் – மாநகராட்சி தகவல்
Chennai Cleanliness Drive : சென்னை கடற்கரையில் பொங்கலை முன்னிட்டு ஏராளமான மக்கள் குவிந்தனர். இந்த நிலையில் சென்னை கடற்கரைகளில் மேற்கொண்ட சுத்தம் செய்யும் பணிகளின் போது 233 மெட்ரிக் கழிவுகள் அகற்றப்பட்டதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. அது குறித்து பார்க்கலாம்.
சென்னை, ஜனவரி 18 : சென்னையில் பொங்கல் (Pongal) பண்டிகையை முன்னிட்டு கடற்கரை (Beach) பகுதிகளில் சுத்தம் செய்தபோது 233.88 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், பொதுமக்கள் பொழுதுபோக்குக்காக வந்து செல்லும் கடற்கரை பகுதிகளை சுத்தமாகவும், சுகாதாரமானதாகவும் பராமரிக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து காணும் பொங்கலை முன்னிட்டு மக்கள் அதிக அளவில் கடற்கரைகளில் குவிந்த நிலையில் சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், பாலவாக்கம், நீலாங்கரை, அக்கரை மற்றும் திருவொற்றியூர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் தினசரி சுத்தம் செய்யும் பணிகள் பல்வேறு நேரங்களில் தூய்மை பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, பொங்கல் பண்டிகை காலத்தில் கடற்கரைகளுக்கு அதிகளவில் பொதுமக்கள் வருகை தருவதை கருத்தில் கொண்டு, ஜனவரி 14, 2026 முதல் கூடுதல் பணியாளர்கள் மற்றும் இயந்திரங்களை பயன்படுத்தி தீவிர சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதையும் படிக்க : பொங்கல் நீச்சல் போட்டி… குழந்தைகள் கண்முன்னே தந்தை உயிரிழந்த சோகம்
சென்னை கடற்கரைகளில் 233 மெட்ரிக் கழிவுகள் அகற்றம்
இதன் விளைவாக, ஜனவரி 14 முதல் ஜனவரி 17, 2026 வரை சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள கடற்கரை பகுதிகளில் இருந்து மொத்தம் 233.88 மெட்ரிக் டன் திடக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதில் உணவுக் கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான குப்பைகள் அடங்கும். திடக் கழிவு மேலாண்மை விதிகள் 2016ன் படி, பொது இடங்கள் மற்றும் கடற்கரைகளில் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள், உணவுக் கழிவுகள் உள்ளிட்ட எந்தவொரு வகை கழிவுகளையும் கொட்டுவது சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி நினைவூட்டியுள்ளது.
கடற்கரை பகுதிகளில் குப்பை வீசுவதைத் தடுக்கும் வகையில், சென்னை மாநகராட்சி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது. பொதுமக்கள் சுகாதாரத்தை பேணுவதன் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதற்காக கடற்கரைகளில் பல இடங்களில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் மட்டுமே கழிவுகளை போட வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
இதையும் படிக்க : நாளை மீண்டும் பள்ளிகள் திறப்பு.. 24வது நாளாக நீடிக்கும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்..
ரூ.1,90,500 அபராதம்
இத்தகைய அறிவுறுத்தல்களை மீறி, மெரினா மற்றும் பிற முக்கிய கடற்கரைகளில் குப்பைத் தொட்டிகளை பயன்படுத்தாமல் கழிவுகளை வீசிய நபர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட 26 கண்காணிப்பு குழுக்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், விதிமீறலில் ஈடுபட்ட 241 நபர்களிடம் ரூ.1,90,500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, கடற்கரை பகுதிகளுக்கு வருகை தரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனைவரும் தங்களின் கழிவுகளை நிர்ணயிக்கப்பட்ட குப்பைத் தொட்டிகளில் மட்டும் போட்டு, கடற்கரைகளை சுத்தமாக பராமரிக்க சென்னை மாநகராட்சியின் சுத்தம் பணிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.



