மதுரையில் பிரபல நகைக்கடையில் 35 கிலோ தங்கம் கொள்ளை.. கடை திறந்த 15 நாட்களில் கைவரிசை!
Madurai Tanishq showroom robbery: மதுரை பைபாஸ் ரோடு நேரு நகர் பகுதியில் புதிதாகத் திறக்கப்பட்ட தனிஷ்க் (Tanishq) நகைக்கடையில், கடை திறந்த 15 நாட்களுக்குள் சுமார் 35 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மர்ம கும்பலைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மதுரை, நவ.12: தமிழகத்தில் வணிக நிறுவனங்கள் மற்றும் நகைக் கடைகளை குறிவைத்து தொடர் குற்றச் சம்பவங்கள் அரங்கேறிவரும் நிலையில், மதுரையில் அதிநவீனப் பாதுகாப்பு வசதிகள் கொண்ட பிரபல நகைக்கடையில் நடந்துள்ள மாபெரும் கொள்ளைச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பழங்காநத்தம் அருகே பைபாஸ் ரோடு நேரு நகர் பகுதியில், டாடா நிறுவனத்திற்குச் சொந்தமான புகழ்பெற்ற ‘தனிஷ்க்’ (Tanishq) நகைக்கடை கடந்த சில நாட்களுக்கு முன்பு புதியதாகத் திறக்கப்பட்டது. தீபாவளி மற்றும் விற்பனைக்காக புத்தம் புதிய தங்க நகைகள் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்த இந்த நகைக்கடை திறக்கப்பட்டு வெறும் 15 நாட்களே ஆன நிலையில், நள்ளிரவில் மர்மக் கும்பல் ஒன்று துணிகரமான கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது.
இதையும் படிக்க: “அன்பில் மகேஷுக்கு ஜாமீன்?”.. நவ.17க்குள் போலீசார் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
பின்பக்கச் சுவரில் துளையிட்டு கைவரிசை:
கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாலை சுமார் 3 மணி அளவில் இந்தத் துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. நகைக்கடையின் பாதுகாப்பைக் கணிக்க முடியாதவாறு, கடையின் பின்பக்கச் சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், கடையில் இருந்த சிசிடிவி கேமராக்களின் திசையைத் திருப்பிவிட்டோ அல்லது அவற்றை மறைத்தோ தங்களது கைவரிசையைக் காட்டியுள்ளனர். கடையின் உள்ளே வைக்கப்பட்டிருந்த சுமார் 35 கிலோவிற்கும் அதிகமான தங்க நகைகள் மொத்தமாகக் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகக் கடை உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தம் புதியதாகத் தொடங்கப்பட்ட ஒரு ஷோரூமில் இவ்வளவு பெரிய அளவிலான நகைகள் கைமாறியிருப்பது ஒட்டுமொத்த வியாபாரிகளையும் உலுக்கியுள்ளது.
உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு:
இந்தச் சம்பவம் குறித்த தகவல் அறிந்தவுடன், மதுரை மாநகரக் காவல் துறை ஆணையர் ராஜேந்திரன், துணை ஆணையர் மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்து சென்று தீவிர ஆய்வு மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, நகைக்கடையின் ஒவ்வொரு மூலையிலும் பதிவாகியுள்ள தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், குற்றவாளிகளை அடையாளம் காண மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டுச் சோதனைகள் நடத்தப்பட்டன. ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில், இந்தத் துணிகரக் கொள்ளையில் மூன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் திட்டமிட்டு ஈடுபட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இதையும் படிக்க: தவெக ஆட்சியில் மீண்டும் சிறுமி கடத்தல் முயற்சி.. காவல்துறைக்கு விடப்பட்ட சவால்.. நயினார் நாகேந்திரன்!
தீவிரமடையும் தேடுதல் வேட்டை:
நகைக்கடை அமைந்துள்ள பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள முக்கிய தெருக்களில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளையர்கள் எந்த வழியில் வந்தார்கள், எந்த வாகனங்களைப் பயன்படுத்தினார்கள் என்பது குறித்த தடயங்களைக் கைப்பற்றும் பணியில் தனிப்படை போலீசார் களமிறக்கப்பட்டுள்ளனர். கடை திறந்த மிகக் குறுகிய காலத்திற்குள் கோடிக்கணக்கான மதிப்புள்ள 35 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது மதுரைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றவாளிகளை விரைவில் கைது செய்யக் கோரி பொதுமக்களும் வணிகர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.