அன்றே விஜய்யை கைது செய்திருக்க வேண்டும்.. மீண்டும் தேர்தல் வரும் – அனிதா ராதாகிருஷ்ணன் சர்ச்சை பேச்சு..
தமிழ்நாட்டில் உங்களுடைய ஆட்சி என்பது நிரந்தரமானதா? இன்னும் ஆறு மாத காலத்திற்கு உங்களுடைய ஆட்சி நீடிக்காது. உங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் உங்களுடன் இருக்க மாட்டார்கள். எந்த வகையிலாவது, தமிழ்நாட்டில் இன்னும் ஆறு மாத காலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது நிச்சயம். நம்முடைய தளபதி மீண்டும் முதலமைச்சராக வருவார். அதனை எவராலும் தவிர்க்க முடியாது என முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்.
ஜூலை 18, 2026: திமுகவின் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “இன்னும் ஆறு மாத காலத்தில் எப்படியாவது இந்த ஆட்சி கவிழ்ந்து விடும். மீண்டும் தேர்தல் நடைபெறும். அப்போது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் இருப்பார்” என அவர் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். இதற்கு முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசியதாக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். இந்தச் சூழலில், மீண்டும் இதேபோன்ற கருத்துகளை அவர் முன்வைத்துள்ளார்.
அனைத்து வகையான பேரங்களில் ஈடுபட்டுள்ளது தவெக:
“அதிமுகவைச் சேர்ந்த 23 சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து, சால்வை அணிவித்து, ‘நீங்கள் பதவியை ராஜினாமா செய்யுங்கள்; நான் உங்களை மீண்டும் வெற்றி பெறச் செய்கிறேன்’ என்று கூறி பேரம் பேசுவது யார்? குதிரைப் பேரம், ஒட்டகப் பேரம், மாட்டுப் பேரம் என பல்வேறு பேரங்களை தமிழக வெற்றிக் கழகம்தான் செய்து வருகிறது.
Also Read: ஆகஸ்ட் 4-ல் டெல்லி பறக்கும் முதல்வர் விஜய்.. பயணத்திற்குப் பின்னால் இருக்கும் மாஸ் பிளான்!!
அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டிடிவி தினகரனின் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரைக்கூட தமிழக வெற்றிக் கழகம் விலை கொடுத்து வாங்கிச் சென்றுள்ளது. இப்படி பல பேரங்களை செய்துவிட்டு, இன்று தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நெஞ்சை நிமிர்த்தி நடந்து செல்கிறார்.
கரூர் சம்பவத்தின் போது ஓட்டம் பிடித்தது யார்? அன்றே கைது செய்திருக்க வேண்டும்:
புதுச்சேரியைச் சேர்ந்த அமைச்சர் ஆனந்த், இங்கு நிலவும் அரசியல் சூழ்நிலைகள் குறித்து எதுவுமே தெரியாமல் பேசுகிறார். திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பொய்யான வழக்குகளைப் பதிவு செய்து, அவர்கள் ஓடிவிட்டதாக விஜய் விமர்சித்து வருகிறார்.
ஆனால், கடந்த ஆண்டு கரூரில் கூட்டம் நடைபெற்றபோது, அங்கிருந்து ஓட்டம் பிடித்தது யார்? அன்றைக்கு முதலமைச்சராக இருந்த மு.க. ஸ்டாலின், விஜயைக் கைது செய்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், இன்று இவ்வளவு திமிராகப் பேசியிருப்பாரா?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read: உங்கள் தகவல் ரகசியமாக… மக்கள் தொகை கணக்கெடுப்பு – மக்களுக்கு முதல்வர் விஜய் கோரிக்கை
மேலும், “தமிழ்நாட்டில் உங்களுடைய ஆட்சி என்பது நிரந்தரமானதா? இன்னும் ஆறு மாத காலத்திற்கு உங்களுடைய ஆட்சி நீடிக்காது. உங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் உங்களுடன் இருக்க மாட்டார்கள்.
இன்னும் 6 மாதத்தில் மீண்டும் தேர்தல் வரும்:
கஞ்சா விற்றவர்கள் இன்று அமைச்சர்களாக அமர்ந்திருக்கிறார்கள். நாங்கள் யாரையும் அழைக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களாகவே எங்களிடம் வந்து சேர்வார்கள். எந்த வகையிலாவது, தமிழ்நாட்டில் இன்னும் ஆறு மாத காலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது நிச்சயம். நம்முடைய தளபதி மீண்டும் முதலமைச்சராக வருவார். அதனை எவராலும் தவிர்க்க முடியாது” என ஆவேசமாகப் பேசியுள்ளார். அனிதா ராதாகிருஷ்ணனின் இந்தப் பேச்சு தற்போது சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது.