மக்களே நோட் பண்ணுங்க.. செங்கல்பட்டு மின்சார ரயில் சேவை இன்று ரத்து!
Chennai Suburban Train Service: பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே பகல் நேரங்களில் இயக்கப்படும் ரயில் சேவைகள் சில ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடாக பகுதியளவு சிறப்பு ரயில்கள் அதே நேரங்களில் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிட்டு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை, செப்டம்பர் 26: சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக புறநகர் ரயில் சேவைகளில் சில ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எனவே பயணிகள் தங்களின் பயணத்தை சரியான நேரத்தில் திட்டமிட்டுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் மிக முக்கியமான போக்குவரத்து சாதனங்களில் ஒன்றாக புறநகர் ரயில்கள் திகழ்கிறது. சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், வேளச்சேரி, செங்கல்பட்டு, திருமால்பூர், புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்கும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆவடி, திருவள்ளூர், பட்டாபிராம், திருப்பதி வரையும் தினசரி புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயில்கள் மூலம் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் தொடங்கி வியாபாரிகள், வெளியூர் மக்கள் என நாள் ஒன்றுக்கு குறைந்தது 5 லட்சம் பேர் பயணம் மேற்கொள்கின்றனர். அதிகாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை குறிப்பிட்ட நிமிட இடைவெளியில் இந்த புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இத்தகைய ரயில்களில் சாதாரண, எக்ஸ்பிரஸ், முழுவதும் குளிரூட்டப்பட்ட பெட்டிகள் கொண்ட ரயில்கள் பல்வேறு கட்டண அடிப்படையில் இயக்கப்படுகிறது.
Also Read: ஏசி மின்சார ரயிலில் போறீங்களா? தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு




இன்று சேவைகள் ரத்து
இப்படியான நிலையில் சென்னை ரயில்வே முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு ரயில்வே பணிமனையில் உள்ள தண்டவாள பகுதியில் வெள்ளிக்கிழமை செப்டம்பர் 26 ஆம் தேதியான இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக பகல் நேரங்களில் சில மின்சார ரயில்களின் சேவையானது ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.31 மணி, 9.51 மணி, 10.56 மணி, 11.40 மணி, நண்பகல் 12.25 மணிக்கு செங்கல்பட்டு சந்திப்புக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் காலை 7.27 மணிக்கு திருமால்பூர் வரை இயக்கப்படும் ரயில் சேவையும் இன்று கிடையாது.
மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை காலை 11.30 மணி, நண்பகல் 12 மணி, பிற்பகல் 1.10 மணி, 1.45 மணி, 2.20 மணிக்கு இயக்கப்படும் புறநகர் ரயில் சேவை இன்று இயங்காது. மேலும் திருமால்பூரில் இருந்து காலை 11.05 மணிக்கு சென்னை கடற்கரை வரை செல்லும் ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுகிறது.
Also Read: Navratri: மக்களே ரெடியா இருங்க.. நவராத்திரி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
எனினும் பயணிகள் வசதியைக் கருத்தில் கொண்டு சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு காலை 7.27 மணிக்கும், காலை 9.31 மணி, 10.56 மணி, மதியம் 12.25 மணிக்கும் சிங்கப்பெருமாள் கோயில் வரையும், காலை 9.51, 11.40 மணிக்கு காட்டாங்கொளத்தூர் வரையும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அதேசமயம் செங்கல்பட்டில் இருந்து 9.45 மணிக்கும், சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து காலை 11.43, மதியம் 1.23, 2.33 மணிக்கும், காட்டாங்கொளத்தூரில் இருந்து 12.20, 2.05 மணிக்கும் சென்னை கடற்கரை வரை சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.