இனி சண்டேவும் பிரச்சாரம் இருக்கு.. 2026 பிப்ரவரி வரை விஜயின் மாஸ்டர் பிளான்..
TVK Leader Vijay Campaign: இனி சனிக்கிழமைகளில் மட்டுமல்லாமல் வரும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விஜய் பிரச்சாரம் மேற்கொள்வார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மக்கள் கூட்ட நெரிசல் மற்றும் பிற காரணிகளால், 2026 பிப்ரவரி மாதம் வரை பிரச்சாரம் நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 25, 2025: தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜயின் சுற்றுப்பயணம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2025 டிசம்பர் மாதம் வரை திட்டமிடப்பட்டிருந்த இந்த சுற்றுப்பயணம், தற்போது 2026 பிப்ரவரி மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தமிழக வெற்றி கழகம் தனது முதல் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது. இதற்காக, அதன் தலைவர் விஜய் மாவட்டம் தோறும் சென்று மக்களை சந்தித்து வருகிறார். இந்த சுற்றுப்பயணம் 2025 செப்டம்பர் 13 ஆம் தேதி தொடங்கி, 2025 டிசம்பர் 20 ஆம் தேதி வரை நடைபெறும் என முதலில் திட்டமிடப்பட்டது. ஆரம்பத்தில், ஒரு நாளுக்கு மூன்று மாவட்டங்களுக்கு சென்று மக்களைச் சந்தித்து பரப்புரை ஆற்றுவது திட்டமாக இருந்தது. ஆனால், 2025 செப்டம்பர் 13 அன்று திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
விஜர் பிரச்சார வாகனத்தை சூழ்ந்த மக்கள்:
அன்று திருச்சியில் 5 கிலோமீட்டர் தூரத்தை கடக்க சுமார் 6 மணி நேரம் எடுத்துக் கொண்டது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பிரச்சார வாகனத்தைச் சூழ்ந்ததால் இத்தாமதம் ஏற்பட்டது. நான்கு மணி நேரம் கழித்து திருச்சியில் இருந்து அரியலூருக்கு சென்றடைந்த விஜய், அங்கு மக்களிடையே திமுக அரசை கடுமையாக விமர்சித்து உரையாற்றினார்.
மேலும் படிக்க: வாய், மூக்கில் வடிந்த ரத்தம்.. சிக்கன் ரைஸ் சாப்பிட்ட சிறுமிக்கு நேர்ந்த சோகம்.. சென்னையில் ஷாக்
அன்றைய தினம் பெரம்பலூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அதிகமான மக்கள் பிரச்சார வாகனத்தைச் சூழ்ந்ததால், வாகனம் நகர முடியாமல் அங்கேயே சிக்கியது. இதனால் பெரம்பலூர் மாவட்ட சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டது; அது வேறு நாளுக்கு மாற்றி அமைக்கப்பட்டது.
ஒரு நாளைக்கு இரண்டு மாவட்டங்கள் திட்டம்:
அதனைத் தொடர்ந்து, 2025 செப்டம்பர் 20 ஆம் தேதி நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். முதலில் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மூன்று மாவட்டங்களில் பிரச்சாரம் நடைபெறும் என திட்டமிடப்பட்டிருந்த நிலையில், திருச்சியில் ஏற்பட்ட மக்கள் கூட்ட நெரிசலின் காரணமாக திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு, இரண்டு மாவட்டங்களிலேயே பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் படிக்க: ஏசி மின்சார ரயிலில் போறீங்களா? தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு
அடுத்தடுத்த சனிக்கிழமைகளிலும் இரண்டு மாவட்டங்களில் மட்டுமே விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், 2025 செப்டம்பர் 27 அன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பிரச்சாரம் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2026 பிப்ரவரி வரை பிரச்சாரம் செய்ய திட்டம்:
அக்டோபர் 4, 2025 அன்று வேலூர் மற்றும் ராணிப்பேட்டையில் பிரச்சாரம் நடைபெறும். அதைத் தொடர்ந்து அக்டோபர் 15, 2025 அன்று கடலூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட உள்ளது. இனி வரும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விஜய் பிரச்சாரம் மேற்கொள்வார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் கூட்ட நெரிசல் மற்றும் பிற காரணிகளால், 2025 டிசம்பர் மாதம் வரை திட்டமிடப்பட்டிருந்த விஜயின் சுற்றுப்பயணம், நீட்டிக்கப்பட்டு 2026 பிப்ரவரி மாதம் வரை நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.