மதுரை-கோவை, சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றங்கள் அறிவிப்பு..!
Madurai-Coimbatore Express Change: மதுரை-கோவை எக்ஸ்பிரஸ் 2025 ஜூலை 25 மற்றும் 27 அன்று பொள்ளாச்சி வரை மட்டுமே இயக்கப்படும். 2025 ஜூலை 24 அன்று கும்மிடிப்பூண்டி-சென்னை இடையே பல புறநகர் ரயில்கள் ரத்து மற்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. பயண வசதிக்காக சிறப்பு ரயில்கள் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் இயக்கப்படும்.

தமிழ்நாடு ஜூலை 23: மதுரை-கோவை எக்ஸ்பிரஸ் (Madurai-Coimbatore Express) (16722) ரயில் 2025 ஜூலை 25 மற்றும் 27 தேதிகளில் மதுரையிலிருந்து புறப்பட்டு பொள்ளாச்சி வரை மட்டுமே இயக்கப்படும்; கோவைக்கு செல்லாது. போத்தனூர் ரெயில் நிலையத்தில் தண்டவாளம் புதுப்பிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று, 2025 ஜூலை 24 அன்று கும்மிடிப்பூண்டி-கவரப்பேட்டை (Gummidipoondi-Kavarappettai) இடையே பொறியியல் பணிகள் காரணமாக, சென்னை-கும்மிடிப்பூண்டி புறநகர் ரயில் சேவைகளில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 10.15 மணி முதல் 3.45 மணி வரை பல EMU ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
மதுரை-கோவை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்
மதுரை-கோவை இடையே இயங்கும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போத்தனூர் ரெயில் நிலையத்தில் தண்டவாளம் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற உள்ளதால், வண்டி எண் 16722 மதுரை-கோவை எக்ஸ்பிரஸ், ஜூலை 25 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மதுரை காலை 7.05 மணிக்கு புறப்பட்டு, அந்த நாட்களில் பொள்ளாச்சி வரை மட்டுமே இயக்கப்படும். அந்த நாட்களில் இந்த ரயில் கோவைக்கு இயக்கப்படாது. இது தொடர்பான தகவலை சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் அதிகாரி மரியா மைக்கேல் வெளியிட்டுள்ளார்.
Also Read: ‘ஓஎம்ஆர் தாள்கள் பிரிக்கப்படவில்லை’ – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மறுப்பு!




சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்
சென்னை மற்றும் கும்மிடிப்பூண்டி இடையே இயங்கும் புறநகர் ரயில் சேவைகளிலும் ஜூலை 24-ஆம் தேதி தற்காலிக மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கும்மிடிப்பூண்டி மற்றும் கவரப்பேட்டை இடையே நண்பகல் 1.15 மணி முதல் மாலை 5.15 மணி வரை பொறியியல் பணிகள் நடைபெறவுள்ளதால், பல ரயில்கள் முழுவதும் அல்லது பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் (MMC) மற்றும் சென்னை கடற்கரையிலிருந்து புறப்படும் பல ரயில்கள், காலை 10.15 மணி முதல் பிற்பகல் 3.45 மணி வரை ரத்து செய்யப்படுகின்றன. மேலும், செங்கல்பட்டில் இருந்து காலை 9.55 மணிக்கு புறப்படும் ரயில் மீஞ்சூர் வரை மட்டுமே இயக்கப்படும். பிற்பகல் 3 மணிக்கு கும்மிடிப்பூண்டியில் இருந்து தாம்பரம் செல்லும் ரயில், மீஞ்சூரிலிருந்து புறப்படும்.
Also Read: சென்னையில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு
பயணங்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க, சிறப்பு ரயில்கள் இயக்கம்
பயணங்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க, சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் மற்றும் சென்னை கடற்கரையிலிருந்து பொன்னேரி செல்லும் ரயில்கள் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இயக்கப்படும். மாறாக, பொன்னேரியில் இருந்து திரும்பும் சேவைகளும் நண்பகல் 12.05 மணி முதல் மாலை 4.47 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சூலூர்பேட்டையில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு மாலை 4.30 மணிக்கு ஒரு சிறப்பு ரயிலும் இயக்கப்படும். இந்த மாற்றங்கள், பராமரிப்புப் பணிகளை சீராக மேற்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.