2025 தீபாவளி.. சொந்த வாகனம் வைத்திருப்பவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!

தீபாவளி 2025 பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் மக்கள் மத்தியில், தனியார் வாகனங்களை வாடகைக்கு இயக்கி லாபம் ஈட்ட முயற்சிக்கும் நபர்களுக்கு போக்குவரத்து காவல்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆம்னி பேருந்துகளின் அதிக கட்டணத்தைப் பயன்படுத்தி, சொந்த வாகனங்களை வணிக ரீதியாக இயக்கினால், கடும் அபராதம், வாகனப் பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 தீபாவளி.. சொந்த வாகனம் வைத்திருப்பவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!

தீபாவளி பயணம்

Updated On: 

17 Oct 2025 14:01 PM

 IST

சென்னை, அக்டோபர் 17: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறையினர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். 2025 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 20ஆம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வெளியூரில் இருக்கும் பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் இப்பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர். இதனை முன்னிட்டு ரயில்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், சொந்த வாகனங்கள், வாடகை வாகனங்கள் என பலவகை போக்குவரத்து சாதனங்களை பயன்படுத்தி தங்களது சொந்த ஊர்களுக்கு பயணப்பட்டு வருகின்றனர்.

நேற்று (அக்டோபர் 16) வியாழக்கிழமை தொடங்கி அக்டோபர் 19 ஞாயிற்றுக்கிழமை வரை வெளியூரில் உள்ள மக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள் என்பதால் அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து நெருக்கடி  ஏற்படுவதை தடுக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரயில்களில் ஏற்கனவே முன்பதிவு முடிந்து விட்ட நிலையில் அரசு பேருந்துகளில் செல்ல மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

Also Read:  தீபாவளிக்கு ஈஸியா ஊருக்கு போகணுமா?  ; போலீசார் சொன்ன அட்வைஸ்!

அதுமட்டுமல்லாமல் ஆம்னி பேருந்துகளில் வழக்கத்தை விட மூன்று மடங்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுவதால் குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு செல்ல மக்கள் தயங்கி வருகின்றனர். இந்த நிலையில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தங்களுக்கு சாதகமாக கொண்டு சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் பணியாற்றி வரும் மக்களை குறைந்த கட்டணத்தில் தங்களுடைய சொந்த வாகனத்தில் ஊருக்கு சென்று விடும் பணியை பலர் மேற்கொண்டு வருவதாக போக்குவரத்து காவல்துறைக்கு தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.

வர்த்தக நோக்கத்திற்காக சொந்த வாகனங்கள் இயக்குபவர்கள் மீது அவ்வப்போது கடும் நடவடிக்கையானது எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னையில் சாதாரண நாட்களில் சுற்றுலா மற்றும் பள்ளி மாணவர்களை ஏற்றுச் செல்ல தங்களது சொந்த வாகனங்களை வணிக ரீதியாக சிலர் இயக்கி வருகின்றனர். இது தொடர்பாக ஆங்காங்கே சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு விதிகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம் மற்றும் கார் பறிமுதல் செய்வது நடைபெற்று வருகிறது.

Also Read:  தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்க ஆசையா? வெடிக்கும்போது செய்யக்கூடாத விஷயங்கள்!

இப்படியான நிலையில் வெளியூர் செல்லும் போது பேருந்து நிலையத்தில் நிற்கும் பயணிகளை கட்டண அடிப்படையில் ஏற்றி சொல்லக்கூடாது என தற்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது. சொந்த வாகனங்களை தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி வாடகை வாகனங்களாக மாற்றி விதிகளை மீறி இயக்கினால் கடும் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடத்தப்பட்ட ஐந்து நாட்கள் தீவிர வாகன தணிக்கையில் சுமார் 155 வாகனங்கள் விதிகளை மீறி இயக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இதன் மூலம் ரூ. 18. 53 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.