Tamil Nadu Rains: இன்று நள்ளிரவு கரையை கடக்கும் முரசு புயல்.. சென்னை, திருவள்ளூருக்கு ஆரஞ்சு அலர்ட்..
Murasu Cyclone: இன்று (நவம்பர் 2) சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 2, 2026: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக்கடலில் உருவான ‘முரசு’ புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தீவிர புயலாக கரையை கடக்கும் புயல்..
கடந்த நவம்பர் 1ஆம் தேதி தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ‘முரசு’ புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (நவம்பர் 2) அதிகாலை 2.30 மணியளவில் தீவிர புயலாக வலுப்பெற்றது. தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 8.30 மணியளவில் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.
இந்தப் புயல் மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நெல்லூர் மற்றும் நரசாப்பூர் இடையே, ஓங்கோலுக்கு தெற்கே இன்று நள்ளிரவு 11.30 மணி முதல் நாளை (நவம்பர் 3) அதிகாலை 4 மணிக்குள் தீவிர புயலாக கரையைக் கடக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், சுமார் 3.1 கிலோமீட்டர் உயரத்தில் தெற்கு கேரளப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
சென்னை, திருவள்ளூருக்கு கனமழை எச்சரிக்கை
இன்று (நவம்பர் 2) சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரியிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கிடையே, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மணிக்கு 55 முதல் 65 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 75 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். ஏனைய வட கடலோர தமிழக மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும்.
மேலும் படிக்க: அன்பில் மகேஷுக்கு நவ.4 வரை போலீஸ் காவல்.. சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
நவம்பர் 3 முதல் 8 வரை மழை நிலவரம்
நவம்பர் 3ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தின் ஒருசில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
நவம்பர் 4ஆம் தேதி உள் தமிழக மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 5ஆம் தேதி தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இதர தென் தமிழக மற்றும் கடலோர தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க: தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா.. நாளை காலை சிறப்பு ரயில் முன்பதிவு.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!
நவம்பர் 6ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், இதர தென் தமிழக மற்றும் வட கடலோர தமிழகப் பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 7ஆம் தேதி ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
நவம்பர் 8ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்:
சென்னையைப் பொறுத்தவரை இன்று (நவம்பர் 2) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 முதல் 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.