4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’.. மக்களே உஷார்!!
கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இன்று பலத்த தரை காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும், நாளை காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
சென்னை, நவம்பர் 27: தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய இலங்கையில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, இன்னும் சில மணி நேரத்தில் புயலாக வலுவடையக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது. அதோடு, இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, சென்னைக்கு 730 கிமீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளது. தற்போது இலங்கை அருகே உருவாகும் புதிய புயலுக்கு ‘DITWAH’ என்ற பெயர் சூட்டப்பட உள்ளது. இந்த பெயரை ஏமன் நாடு பரிந்துரைத்துள்ளது. ‘தித்வா’ என்ற பெயருக்கு அரபு மொழியில் ‘தீவு’ என்ற அர்த்தம் சொல்லப்படுகிறது. இந்த புயல் வட தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திரா நோக்கி வரும் என்றும், புயலால் நாளை தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : கரையை கடந்த ‘சென்யார்’… உருவாகும் புதிய புயல்.. தமிழகத்திற்கு அதி கனமழை எச்சரிக்கை
நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்:
இதையொட்டி, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், திருவள்ளூர், தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ரெட் அலர்ட் விடுத்துள்ளது. அதோடு, மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், கடலூர், பெரம்பலூர், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நவ.29ல் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்:
தொடர்ந்து, நாளை மறுநாள் (நவ.29) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரசியலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், புதுக்கோட்டோ, கரூர், திருச்சி, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: “செங்கோட்டையன் பின்னால் பாஜக இல்லை”.. நயினார் நாகேந்திரன் பளீர்!
நவ.30ல் 5 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு:
நவம்பர் 30ம் தேதியன்று சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.