திமுக-காவல்துறை தொடர்பாக சிபிஐ-யிடம் ஆதாரத்துடன் புகார்…பரபரப்பை கிளப்பிய சி.டி.ஆர். நிர்மல் குமார்!
CTR Nirmal Kumar Explains CBI Investigation: கரூர் சம்பவத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் தமிழக போலீசார் செய்த தவறுகளை ஆதாரத்துடன் சிபிஐ அதிகாரிகளிடம் அளித்துள்ளதாக தமிழக வெற்றிக் கழகத்தின் இணை பொதுச்செயலர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்தார் .
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் டெல்லியில் சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகி இருந்தார். இவருடன், , கட்சியின் இணைப்பு பொதுச் செயலாளர் சி. டி. ஆர். நிர்மல் குமார், தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் உடன் சென்றிருந்தனர். இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் முதல் கட்ட விசாரணையை முடித்து விட்டு, இன்று செவ்வாய்க்கிழமை சென்னை திரும்பினார். இதைத் தொடர்ந்து, சென்னையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணை தொடர்பாக கட்சியின் இணை பொதுச் செயலாளர் சி. டி. ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் ஆஜராகி அவர்களுக்கு தேவையான வாக்கு மூலங்களை அளித்துள்ளார்.
விசாரணை அடுத்த வாரம் ஒத்திவைப்பு
பொங்கல் பண்டிகை மற்றும் ஜனநாயகம் படம் தொடர்பான முக்கிய நிகழ்வுகள் இருப்பதால் விசாரணையை அடுத்த வாரம் ஒத்தி வைக்குமாறு கோரிக்கை வைத்தோம். அதை ஏற்றுக் கொண்ட சிபிஐ அதிகாரிகள் வேறொரு தேதியில் விசாரணை மேற்கொள்வதற்கு உத்தரவிட்டனர். சிபிஐ விசாரணை குறித்து வெளிப்படையாக தெரிவிக்க முடியாது. கரூர் சம்பவத்தின் உண்மை நிலவரம் அனைவருக்கும் தெரியும். கரூரில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீசார் எண்ணிக்கை குறித்து முதல்வரும், அப்போதைய ஏடிஜிபியும் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்திருந்தனர்.
மேலும் படிக்க: சிபிஐ முதல் கட்ட விசாரணை நிறைவு…சென்னை புறப்பட்டார் விஜய்…ஜன.19-இல் மீண்டும் ஆஜர்?




சிபிஐ அதிகாரிகளிடம் ஆதாரத்துடன் புகார்
எனவே, கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் ஏற்படுவதற்கு பல்வேறு வகையில் தமிழக அரசும், காவல்துறையும் காரணமாக இருந்துள்ளது. கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை போலீசார் மிரட்டி நாங்கள் தான் விரைவாக பிரேத பரிசோதனைய முடித்த தர கோரினோம் என்று முன் தேதியிட்டு கையொப்பம் வாங்கியதாக சிபிஐ அதிகாரிகளிடம் ஆதாரத்துடன் தெரிவித்துள்ளோம். இது தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தவெக கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றமில்லை
இந்த விவகாரம் தொடர்பாக அடுத்த வாரம் சிபிஐ அதிகாரிகள் குறிப்பிடும் தேதியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் விசாரணைக்காக ஆஜராக உள்ளார். தற்போது வரை அவர் எந்த தேதியில் ஆஜராக உள்ளார் என்ற தகவல் இறுதி செய்யப்படவில்லை. ஜனநாயகன் படம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால் அது தொடர்பாக கருத்து கூற முடியாது. தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணி நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: ஜன நாயகன் பட தாமதத்துக்கு மத்திய அரசே காரணம்..விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த ராகுல் காந்தி!