தமிழகம் வரும் பிரதமர் மோடி.. மதுரையில் இருந்து சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்ட நிகழ்ச்சி.. காரணம் என்ன?
PM Modi Visit to Tamil Nadu: பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகை, தமிழக சட்டமன்றத் தேர்தல் அரசியலுக்கு மேலும் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், இந்த நிகழ்ச்சியின் போது மேலும் சில கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இணைவதற்கான வாய்ப்பு உள்ளது என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.
சென்னை, ஜனவரி 13, 2026: இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரக்கூடிய ஜனவரி 23ஆம் தேதி சென்னைக்கு வருகை தர உள்ளார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பாஜக தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜக தமிழகத்தில் நான்கு இடங்களை கைப்பற்றி, சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டமன்றத்திற்குள் நுழைந்தது. இந்த பின்னணியில், 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் இடங்களை வெல்ல வேண்டும் என்ற நோக்கில், அதற்கான முன்தயாரிப்புப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தேர்தலுக்கு தயாராகும் பாஜக:
ஏற்கனவே, தமிழகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பலமுறை வருகை தந்துள்ளார். அதேபோல், பாஜக சார்பில் தனித்த தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களின் தலைமையில் பல்வேறு கட்டங்களாக ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 23ஆம் தேதி தமிழகம் வருகிறார். குறிப்பாக, சென்னையில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.
மேலும் படிக்க: சென்னையில் ஹெலிகாப்டர் ரைடு…பொதுமக்களுக்காக சுற்றுலாத் துறையின் அசத்தல் ஏற்பாடு!
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் மதுரையில் நடைபெற இருந்தது. முதலில் பிரதமர் மதுரைக்கு செல்ல உள்ளதாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த பொதுக்கூட்டம் மதுரையிலிருந்து சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு வருகை தரும் பிரதமர் மோடி:
இதனைத் தொடர்ந்து, ஜனவரி 23ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வருகை தர உள்ளார். பாஜக சார்பில் நடைபெறவுள்ள இந்த பொதுக்கூட்டத்திற்கான இடத்தைத் தேர்வு செய்யும் பணியில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான அனுமதி கோரி காவல்துறையினருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: “வேலியே பயிரை மேய்ந்த கதை”..பெண்ணுக்கு அத்துமீறி பாலியல் தொல்லை…முதல் நிலை காவலர் கைது!
பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகை, தமிழக சட்டமன்றத் தேர்தல் அரசியலுக்கு மேலும் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், இந்த நிகழ்ச்சியின் போது மேலும் சில கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இணைவதற்கான வாய்ப்பு உள்ளது என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.
பிரதமர் மோடியின் சென்னை வருகை, பாஜக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், தமிழக அரசியலில் புதிய பரபரப்பை உருவாக்கியுள்ளது. இந்த வருகை, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் பிரசாரத்துக்கு அதிகாரப்பூர்வ தொடக்கமாக அமையக்கூடும் எனவும் அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.