சென்னையில் ஹெலிகாப்டர் ரைடு…பொதுமக்களுக்காக சுற்றுலாத் துறையின் அசத்தல் ஏற்பாடு!
Kovalam Tourist Helicopter Service: சென்னையில் சுற்றுத்துறை சார்பில் சுற்றுலா ஹெலிகாப்டர் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர் ஆயிரம் மீட்டர் உயரத்தில் 20 கிலோ மீட்டர் தொலைவு வரை சுற்றுலாப் பயணிகளை அழைத்து சென்று வருகிறது. புதுமண தம்பதிகளும் முன்பதிவு செய்யலாம்.
தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை சுற்றுலாத்துறை மேற்கொண்டு வருகிறது. இதில், பிரபலமான நீர்வீழ்ச்சி பகுதிகள், மலைப்பகுதிகள், கடற்கரைப் பகுதிகள், ஆன்மீக வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவற்றில் சுற்றுலா பயணிகளை அதிகளவு ஈர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னையில் சுற்றுலா ஹெலிகாப்டர் சேவை தொடங்குவதற்கு சுற்றுலாத்துறை முடிவு செய்தது. இதற்காக திருப்போரூர் அடுத்த கோவளம் கிழக்கு கடற்கரை சந்திப்பு சாலை அருகே கம்போடியா நாட்டை சேர்ந்த ஏரோடான் என்ற தனியார் நிறுவனம் சார்பில் அண்மையில் ஹெலிகாப்டர் மையம் அமைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, கடந்த 2025- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட்டது. ஆனால், ஹெலிகாப்டர் சேவைக்காக சில சான்றிதழ் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டதால் இந்த சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
20 கி.மீ. தொலைவுக்கு வானில் வட்டமடிக்கலாம்
இந்த நிலையில், சுற்றுலாத்துறை மற்றும் கம்போடியா நாட்டின் ஏரோடான் சார்பில் கோவளம் பகுதியில் மீண்டும் ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர் சேவையானது, கோவளம் கிழக்கு கடற்கரை சாலை முதல் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவு வரை சுற்றுலா பயணிகளுக்கு சுற்றி காண்பிக்கப்பட்டு வருகிறது. இந்த ஹெலிகாப்டர் பயணத்துக்கு ஒரு நபருக்கு ரூ.6 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
மேலும் படிக்க: காணும் பொங்கல்.. பாதுகாப்பு பணியில் 16,000 காவல் துறையினர்.. சென்னையில் ஏற்பாடுகள் என்ன?




ஹெலிகாப்டரில் ஒரே நேரத்தில் 6 பேர் பயணம்
இந்த ஹெலிகாப்டரில் ஒரே நேரத்தில் 6 பேர் வரை பயணிக்க முடியும். தினந்தோறும் ஹெலிகாப்டர் சுற்றுப் பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, ஒரு நாளைக்கு 50 சவாரிகள் மேற்கொள்ளப்படுகிறது. கோவளம் பகுதியில் இருந்து புறப்படும் ஹெலிகாப்டர் கோவளம், திருவிடந்தை, கேளம்பாக்கம், முட்டுக்காடு கடற்கரை பகுதி ஆகிய பகுதிகளை ஹெலிகாப்டரில் பறந்தவாறு சுற்றிப் பார்க்கலாம். தரைத் தளத்தில் இருந்து சுமார் 1000 மீட்டர் உயரத்தில் ஹெலிகாப்டர் பறந்து செல்லும்.
கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில்…
இதனால், கடற்கரை பகுதி, கடல் பகுதி, நகரப் பகுதி உள்ளிட்டவற்றை ஹெலிகாப்டரில் பறந்தவாறு அதன் அழகை ரசிக்கும் வகையிலும், கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இந்த சுற்றுலா ஹெலிகாப்டர் சேவை இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டரில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு ஆன்லைன் வழியாகவும், நேரடியாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம். அதன்படி, தினந்தோறும் 50- க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்து வருகின்றனர்.
புதுமண தம்பதிகளுக்கும் ஹெலிகாப்டர் சேவை
இதே போல, கோவளம் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் மையத்தில் திறந்த வெளி திருமண அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், புதுமண தம்பதிகள் ஹெலிகாப்டரை முன்பதிவு செய்து அதில் பறந்து வந்து திருமணம் நடைபெறும் அரங்கத்தில் இறங்கி திருமணம் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது. இது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் படிக்க: பொங்கல் பண்டிகை விடுமுறை…கன்னியாகுமரியில் படகு சேவை 3 மணி நேரம் நீட்டிப்பு!