Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

காணும் பொங்கல்.. பாதுகாப்பு பணியில் 16,000 காவல் துறையினர்.. சென்னையில் ஏற்பாடுகள் என்ன?

Pongal Celebration: வண்டலூர் பூங்கா, மெரினா கடற்கரை, பெசன்ட் நகர், சிறுவர் பூங்கா, உள்ளிட்ட பகுதிகளில் அதிகப்படியான மக்கள் கூட்டம். மக்கள் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் சுற்றுலாத்தலங்களை கண்டு கழிப்பதற்காக சென்னை முழுவதும் 16 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணும் பொங்கல்.. பாதுகாப்பு பணியில் 16,000 காவல் துறையினர்.. சென்னையில் ஏற்பாடுகள் என்ன?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 13 Jan 2026 08:40 AM IST

சென்னை, ஜனவரி 13, 2026: வரக்கூடிய ஜனவரி 17ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. காணும் பொங்கலை முன்னிட்டு, பொதுமக்கள் குடும்பத்தினருடன் பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு சென்று மகிழ்வது வழக்கம். இந்தச் சூழலில், எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்கும் வகையில், சென்னையில் 16,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. தைத்திருநாளாம் பொங்கல் பண்டிகை வரக்கூடிய ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. அதேபோல ஜனவரி 16ஆம் தேதி மாட்டுப் பொங்கலும், அதனை தொடர்ந்து 17ஆம் தேதி காணும் பொங்கலும் கொண்டாடப்பட உள்ளது.

பொதுவாக பொங்கல் பண்டிகை முடித்துக் கொண்டு காணும் பொங்கல் அன்று தமிழகத்தில் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் சென்னைக்கு வருகை தந்து பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு செல்வார்கள். குறிப்பாக வண்டலூர் பூங்கா, மெரினா கடற்கரை, பெசன்ட் நகர், சிறுவர் பூங்கா, உள்ளிட்ட பகுதிகளில் அதிகப்படியான மக்கள் கூட்டம். மக்கள் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் சுற்றுலாத்தலங்களை கண்டு கழிப்பதற்காக சென்னை முழுவதும் 16 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

16,000 போலீசார் பாதுகாப்புப் பணியில்:

சென்னை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், காணும் பொங்கலை முன்னிட்டு 17ஆம் தேதி (சனிக்கிழமை), போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரிலும், கூடுதல் கமிஷனர்களின் அறிவுரையின்பேரிலும், 16,000 போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார்,
மேலும் சுமார் 1,500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரையில் சிறப்பு ஏற்பாடுகள்:

  • மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறைகள்
  • 7 சர்வீஸ் சாலைகளின் நுழைவாயில்களில் போலீஸ் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  • அதேபோல், அவசர மருத்துவ உதவிக்காக மருத்துவக் குழுவினருடன் 8 ஆம்புலன்ஸ் வாகனங்கள்,
  • மீட்புப் பணிக்காக 2 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
  • மேலும், மோட்டார் படகுகள், 200-க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள், மீட்புப் பணிக்காக தயார் நிலையில் இருப்பார்கள்.

கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் கேமராக்கள்:

உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை மணற்பரப்பில் 13 தற்காலிக போலீஸ் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு கோபுரத்திலும் 3 பேர் கொண்ட காவல் குழு பணியமர்த்தப்படும்.  மேலும், 12 முக்கிய இடங்களில் கூடுதலாக 13 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, தற்காலிக கட்டுப்பாட்டு அறையில் உள்ள அகன்ற திரைகள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.

மேலும் படிக்க: நகை கடைகளுக்கு ஹிஜாப் அணிந்து வர தடையா? தமிழ்நாடு ஃபேக்ட் செக் சொன்ன விளக்கம் என்ன?,

கடலில் குளிக்க தடை:

பொதுமக்கள் கடலில் குளிக்க முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதால்,  கடற்கரையோரங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். குதிரைப்படை மற்றும் மணற்பரப்பில் செல்லக்கூடிய ரோந்து வாகனங்கள் மூலம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுவர்.

பெசன்ட் நகர் பாதுகாப்பு ஏற்பாடுகள்:

பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறை,  3 தற்காலிக கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலில் குழந்தைகள் காணாமல் போனால் உடனடியாக மீட்க, குழந்தைகளின் கைகளில் கட்டப்படும் அடையாள பேண்டுகள், அடையாள அட்டைகள், போலீஸ் உதவி மையங்கள் மற்றும் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: சாலையில் சென்றபோது திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்து.. புதுச்சேரியில் பரபரப்பு சம்பவம்!

டிரோன் கண்காணிப்பு:

மெரினா கடற்கரையில் 4 டிரோன் கேமராக்கள், பெசன்ட் நகர் கடற்கரையில் 4 டிரோன் கேமராக்கள், என மொத்தம் 8 டிரோன் கேமராக்கள் மூலம் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.

மேலும், மது போதையில் வாகனம் ஓட்டுபவர்கள், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, ஜி.எஸ்.டி. ரோடு உள்ளிட்ட பகுதிகளில், மோட்டார் சைக்கிள் பந்தயம் மற்றும் சாகசங்களைத் தடுக்க கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.