Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

1970-களின் ராஜா…சென்னையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கிய டபுள் டக்கர் பேருந்து…என்னவெல்லாம் ஸ்பெஷல்!

Double Decker Bus Service: சென்னையில் சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு டபுள் டக்கர் பேருந்து சேவையை முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த பேருந்தானது சுற்றுலாப் பயணிகளுக்கு கலாச்சார கட்டடங்களை சுற்றி காண்பிப்பதற்காக இயக்கப்பட உள்ளது.

1970-களின் ராஜா…சென்னையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கிய டபுள் டக்கர் பேருந்து…என்னவெல்லாம் ஸ்பெஷல்!
சென்னையில் டபுள் டக்கர் பேருந்து சேவை தொடக்கம்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 12 Jan 2026 12:44 PM IST

சென்னையில் ஒரு காலத்தில் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமான டபுள் டக்கர் பேருந்து சேவை இயக்கப்பட்டு வந்தது. ஆனால், காலப் போக்கில் சில காரணங்களால் இந்த பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில், சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பேருந்துகள் இயக்கப்படும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த நிலையில், வெளிநாடு வாழ் தமிழர்கள் சார்பில் ரூ.1.8 கோடி மதிப்பிலான டபுள் டக்கர் பேருந்து தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த பேருந்து சேவையை முதல்வர் மு. க. ஸ்டாலின் சென்னை நந்தம்பாக்கத்தில் இன்று திங்கள்கிழமை ( ஜனவரி 12) கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது, அவர் பேருந்தின் உள்ளே சென்று இருக்கையில் அமர்ந்தவாறு பேருந்து ஆய்வு செய்தார். இந்த பேருந்தானது தமிழகத்தில் உள்ள கலாச்சார கட்டடங்களை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடும் வகையில் இயக்கப்பட உள்ளது.

சுற்றுலா தலைமை அலுவலகத்தில் இருந்து…

அதன்படி, சென்னை வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலா துறை தலைமை அலுவலகத்தில் இருந்து பேருந்து புறப்பட்டு சென்னை துறைமுகம், செயிண்ட் சார்ஜ் கோட்டை, ரிப்பன் மாளிகை, எல். ஐ. சி. கட்டடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்ல உள்ளது. தற்போது, ஒரு பேருந்து இயக்கப்பட உள்ள நிலையில், சென்னை பெருநகர போக்குவரத்து கழகம் சார்பில் சுமார் 20 பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதை தொடர்ந்து, மாநகர பேருந்து பயணிகள் பயணம் செய்வதற்காக பல்வேறு வழித் தடங்களில் பேருந்து சேவை தொடங்கப்பட உள்ளது.

மேலும் படிக்க: தவெக தலைவர் விஜய்க்கு பாஜக நெருக்கடி கொடுக்க அவசியமில்லை…நயினார் நாகேந்திரன்!

டபுள் டக்கர் பேருந்தில் உள்ள வசதிகள்

இந்தப் பேருந்தானது சிகப்பு நிற வண்ணத்தில், முழுவதும் ஏசி வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பேருந்தில் கண்ணாடிகள் ஜன்னல்கள் மூலம் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், பேருந்து செல்லும் பகுதிகளை சுற்றுலாப் பயணிகள் உள்ளிருந்த வாரே பார்த்துக் கொண்டே செல்லலாம். அசோக் லேலண்ட் நிறுவனம் தயாரித்த இந்த பேருந்தின் இரு பக்கவாட்டில் தஞ்சாவூர் பெரிய கோவில் படம், கலங்கரை விளக்கம், ரிப்பன் கட்டிடம், ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரன், உழைப்பாளர் படம் உள்ளிட்டவை பொறிக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழ் வாழ்க என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.

1970- இல் ராஜாவாக வலம் வந்த டபுள் டக்கர்

சென்னையில் கடந்த 1970- ஆம் ஆண்டில் தாம்பரத்திலிருந்து, சென்னை உயர்நீதிமன்றம் வரை டபுள் டக்கர் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்த இந்த பேருந்து சேவையானது கடந்த 2008- ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இந்த பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில், சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பேருந்து சேவை இன்று முதல் தொடங்கியுள்ளது.

மேலும் படிக்க: மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகள்…தடபுடலாக தயாராகும் வாடிவாசல்…களம் காணும் காளைகள்-காளையர்கள்!