ஜன நாயகன் பட தாமதத்துக்கு மத்திய அரசே காரணம்..விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த ராகுல் காந்தி!
Rahul Gandhi Attack Central Government: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடித்த ஜனநாயகன் பட சென்சார் தாமதத்துக்கு மத்திய பாஜக அரசு தான் காரணம் எனவும், மக்களின் குரலை அடக்க நினைக்கும் பிரதமர் மோடியின் எண்ணம் வெற்றி பெறாது என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடித்த கடைசி படமான ஜனநாயகனுக்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதற்கு மத்திய பாஜக அரசு தான் காரணம் என்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதனிடையே, மத்திய பாஜக அரசை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேரடியாக அட்டாக் செய்து பேசியிருந்தார். இதனால், பட விவகாரத்தில அரசியல் செய்யப்படுவதாகவும் எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன. இதனால், ஜனநாயகம் பட சென்சார் விவகாரம் தொடர்பாகவும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு ஆதரவாகவும் காங்கிரஸ் கட்சியை சார்ந்த மாணிக்கம் தாகூர் எம். பி., ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமானவராக கூறப்படும் பிரவீன் சக்கரவர்த்தி மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர்.
விஜய்க்கு ஆதரவாக குரல் எழுப்பிய ராகுல் காந்தி
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மக்களவை எதிர்க் கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படம் வெளியிடுவதை தடுப்பதற்காக மத்திய அரசு மேற்கொண்ட முயற்சி தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்றும், ஜன நாயகன் திரைப்படத்தை தடுக்க தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் முயற்சி தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க: தமிழகம் வரும் பிரதமர் மோடி.. மதுரையில் இருந்து சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்ட நிகழ்ச்சி.. காரணம் என்ன?




ஜன நாயகன் பட தாமதத்துக்கு மத்திய அரசு தான் காரணம்
தமிழ்நாட்டு மக்களின் குரலை அடக்குவதில் பிரதமர் மோடி ஒருபோதும் வெற்றி பெற மாட்டார். ஜன நாயகன் படத்துக்கான தாமதத்துக்கு மத்திய பாஜக அரசு தான் காரணம் என்று தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை, ராகுல் காந்திக்கு நெருக்கமானவராக கூறப்படும் பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்து பேசி இருந்தார். இதனால், தமிழக வெற்றிக் கழகத்துடன், தமிழக காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்கும் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது.
தமிழக அரசியலில் பரபரப்பு
மேலும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி கேட்கும் தொகுதிகளையும், ஆட்சியில் பங்கு வேண்டும் என்பதையும் தர வேண்டும் எனவும், இல்லையெனில் தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைக்க உள்ளதாகவும் பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை ( ஜனவரி 13) ராகுல் காந்தி தமிழகம் வர உள்ள நிலையில், விஜய்க்கு ஆதரவாகவும், மத்திய பாஜகவுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது கூட்டணிக்கு அச்சாரமா என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது.
மேலும் படிக்க: சிபிஐ முதல் கட்ட விசாரணை நிறைவு…சென்னை புறப்பட்டார் விஜய்…ஜன.19-இல் மீண்டும் ஆஜர்?