Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பிரபல ரவிடி வெட்டிக்கொலை.. அதிர்ச்சியூட்டும் பின்னணி.. 8 பேர் கைது..

Chennai Crime: ரவுடி ஆதி கொலை செய்யப்பட்ட இடத்தில், சென்னை காவல்துறை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் நரேந்திரன் நாயர் ஆய்வு மேற்கொண்டார். இணை ஆணையர் பண்டிட் கங்காதர், மருத்துவக் கல்லூரி RMO வாணி மற்றும் மருத்துவ அதிகாரி பாஸ்கர் ஆகியோருடன் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினார். 

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பிரபல ரவிடி வெட்டிக்கொலை.. அதிர்ச்சியூட்டும் பின்னணி.. 8 பேர் கைது..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 12 Jan 2026 20:43 PM IST

ஜனவரி 12, 2026: சென்னை கொளத்தூர் மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் ரவுடி ஆதி என்ற ஆதிகேசவன் (20). ராஜமங்கலம் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ரவுடி ஆதி மீது கொலை, அடிதடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரவுடி ஆதிக்கும், வில்லிவாக்கம் பொண்ணாங்கிணறு தெருவைச் சேர்ந்த சாருமதி (23) என்பவருக்கும் இடையே தவறான உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சாருமதிக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் இருக்கும் நிலையில், அவர் ரவுடியுடன் தகாத உறவில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குற்றம் நடந்தது எப்படி?

நேற்று இரவு, சாருமதி தனது கள்ளக்காதலன் ரவுடி ஆதியை செல்போனில் தொடர்பு கொண்டு, தனது தோழியான ஆவடி ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த சுசித்ரா (21) என்பவருக்கு கடந்த 18ஆம் தேதி பெண் குழந்தை பிறந்ததாகவும், திடீரென குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்று இரவு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனது தோழிக்கு யாரும் ஆதரவு இல்லாததால், அவருடன் மருத்துவமனையில் தங்கியுள்ளதாகவும், உடனே வருமாறும் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: ஆம்னி பேருந்தில் கூடுதல் கட்டணம்…களமிறங்கிய சிறப்பு குழு- புகார் எண்கள் அறிவிப்பு!

இதனைத் தொடர்ந்து, சாருமதியின் வேண்டுகோளின் பேரில் ரவுடி ஆதி நேற்று இரவு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு சாருமதி, ஆதிக்கு மது வாங்கிக் கொடுத்து, மதுபோதையில் தன்னுடன் தூங்க வைத்துள்ளார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நியூ லேபர் வார்டு அருகே, ரவுடி ஆதி தனது கள்ளக்காதலியுடன் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், இன்று அதிகாலை அங்கு வந்த அடையாளம் தெரியாத கும்பல், ஆதியை கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது.

மருத்துவமனையில் ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம்:

மருத்துவமனையில் புகுந்து ரவுடியை ஒரு கும்பல் கொலை செய்து விட்டு சென்றதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் கீழ்ப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ரவுடி ஆதியின் உடலை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: திமுக கூட்டணியில் பாமக இணைய வாய்ப்புள்ளது….அமைச்சர் ராஜகண்ணப்பன்!

கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்திற்கு, கொல்லப்பட்ட ஆதியின் தாயார் மற்றும் உறவினர்கள் வந்து புகார் அளித்தனர். அப்போது உறவினர்கள் கதறி அழுதனர். “கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிறந்த ஆதி, அதே மருத்துவமனையிலேயே கொலை செய்யப்பட்டுள்ளார்” என அவரது பெரியம்மா கண்ணீருடன் தெரிவித்தார்.

இது தொடர்பாக பேசிய ஆதியின் பெரியம்மா, “நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இன்று நீதிமன்றத்தில் ஆதி கையெழுத்திட வேண்டியிருந்தது. அதற்குள் கொலை செய்து விட்டனர். எந்த காரணத்திற்காக கொலை செய்தார்கள் என்ற தகவல் எதுவும் தெரியவில்லை. பொதுமக்கள் அதிகம் வரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள்ளேயே கொலை செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது” என கண்ணீருடன் கூறினார்.

போலீசார் தீவிர விசாரணை:

இதனைத் தொடர்ந்து, ரவுடி ஆதி கொலை செய்யப்பட்ட இடத்தில், சென்னை காவல்துறை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் நரேந்திரன் நாயர் ஆய்வு மேற்கொண்டார். இணை ஆணையர் பண்டிட் கங்காதர், மருத்துவக் கல்லூரி RMO வாணி மற்றும் மருத்துவ அதிகாரி பாஸ்கர் ஆகியோருடன் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

முதற்கட்ட விசாரணையில், ரவுடி ஆதி, பிரபல ரவுடி விக்கி என்ற அமாவாசையின் கூட்டாளி என்பதும், 2022ஆம் ஆண்டு கொளத்தூர் மகாத்மா காந்தி நகரில் ரவுடி பழனி என்பவரை வெட்டி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமினில் வெளியே வந்ததும் தெரியவந்துள்ளது. அதன் பிறகு கட்டப்பஞ்சாயத்து, மாமூல் வசூலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

8 பேரை கைது செய்த போலீசார்:

சக ரவுடியான ஆட்டோ கணேஷுடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கோயம்பேடு பகுதியில் வைத்து ஆட்டோ கணேஷை கொலை செய்ய முயன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், ஆதியை கொலை செய்த கும்பலுக்கு அவரது நண்பர்கள் சூர்யா, அலிபாய், கார்த்திக் ஆகியோர் உதவி செய்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், கேஎம்சி மருத்துவமனைக்குள் ரவுடி கொலை தொடர்பாக, மொத்தம் 8 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இந்த கொலை பழிக்கு பழி தீர்க்க திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவும், பழனி நினைவு நாள் நெருங்கி வருவதால், அதற்கு முன்பே ஆதியை கொலை செய்ததாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரத்தில், ஆதி தவறான உறவில் இருந்ததாக கூறப்படும் தகவலை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர். கள்ளக்காதல் காரணமா? முன்விரோதமா? அல்லது வேறு காரணமா? என்ற பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை முடிவில் உண்மை காரணம் தெரியவரும் என காவல்துறை தெரிவித்துள்ளது.