கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கு…டிஜிபி-யிடம் சிபிஐ அதிகாரிகள் அதிரடி விசாரணை!
CBI Officials Question To DGP: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக அப்போதைய ஏடிஜிபியும், தற்போதைய ஆயுதப்படை டிஜிபியுமான டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் சிபிஐ அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். விஜய் சிபிஐ விசாரணைக்கா டெல்ல சென்ற நிலையில், இந்த விசாரணை நடைபெற்றுள்ளது.
கரூர், வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரை பயணத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணையை உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு மேற்பார்வை செய்து வருகிறது. இந்த சம்பவம் நடைபெற்றதற்கு பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. இதில், குறிப்பிட்ட நேரத்துக்கு விஜய் கரூருக்கு வரவில்லை, போலீசார் முறையான பாதுகாப்பு வழங்கவில்லை, பொதுமக்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கவில்லை என்பன உள்ளிட்ட கருத்துக்கள் முன் வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், இந்த சம்பவம் நடைபெற்ற போது, அப்போதைய ஏடிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் சிபிஐ விசாரணை வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளார்.
டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் சிபிஐ விசாரணை
கரூர் சம்பவம் நிகழ்ந்த போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், அப்போதைய ஏடிஜிபியும், தற்போதைய ஆயுதப்படை டிஜிபியாகவும் இருக்கும் டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். கரூர் உயிரழப்பு சம்பவம் நடைபெற்ற போது தமிழக அரசு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையமும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில், வடக்கு மண்டல ஐஜி அசரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
மேலும் படிக்க: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜர்.. அதிகாரிகள் கிடுக்குப்பிடி கேள்வி!!




கரூர் முகாமிட்டுள்ள சிபிஐ அதிகாரிகள்
இதனிடையே, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் அடிப்படையில் சிபிஐ விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், கரூர் வேலுச்சாமிபுரத்தில் சிபிஐ அதிகாரிகள் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அண்மையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் மற்றும் மத்திய தடய அறிவியல் துறை அதிகாரிகள் வேலுச்சாமிபுரத்தில் விஜயின் பிரச்சார பேருந்தை கொண்டு வந்து விசாரணை நடத்தி இருந்தனர். இதைத் தொடர்ந்து, இன்று திங்கள்கிழமை ( ஜனவரி 12) டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சென்றுள்ளார்.
விறுவிறுப்பாகும் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு
இந்த நிலையில், தமிழகத்தின் அப்போதைய ஏடிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவசீர்வாதத்திடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். இவ்வாறாக கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொது செயலாளர் சி. டி. ஆர். நிர்மல் குமார், தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் சிபிஐ முன் ஆஜராகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: கமல் ஹாசன் பெயர் மற்றும் புகைப்படங்கள் வணிக ரீதியில் பயன்படுத்த தடை – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..