கமல் ஹாசன் பெயர் மற்றும் புகைப்படங்கள் வணிக ரீதியில் பயன்படுத்த தடை – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..
Chennai High Court: கமல் ஹாசன் தொடுத்த வழக்கில் அனுமதியின்றி வர்த்தக ரீதியில் கமல்ஹாசனின் பெயர் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி ‘நீயே விடை’ நிறுவனத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை பிப்ரவரி மாதத்துக்கு தள்ளிவைத்தார்.
சென்னை, ஜனவரி 12, 2026: நடிகர் கமல்ஹாசனின் பெயர் மற்றும் புகைப்படங்களை வர்த்தக ரீதியில் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த ‘நீயே விடை’ என்ற பெயருடைய நிறுவனம், தனது புகைப்படம், பெயர், ‘உலகநாயகன்’ என்ற பட்டம் மற்றும் தனது பிரபல வசனங்களை தனது அனுமதியின்றி பயன்படுத்தி, டி-ஷர்ட்களையும், ஷர்ட்களையும் விற்பனை செய்து வருவதாகக் கூறி, நடிகர் கமல்ஹாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
வழக்கு பின்னணி என்ன?
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்தபோது, தனி உரிமையை பாதுகாக்கும் வகையில் ‘நீயே விடை’ நிறுவனம் மட்டுமல்லாமல், வேறு எந்த நிறுவனங்களும் தனது பெயர், புகைப்படம், பட்டங்கள் மற்றும் வசனங்களை தனது அனுமதியின்றி பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் மற்றும் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆகியோர் வாதிட்டனர்.
மேலும் படிக்க: டெல்டா மாவட்டங்களில் தொடரும் கனமழை.. 4 டிகிரி வரை குறையும் வெப்பநிலை – வானிலை ரிப்போர்ட்..
வர்த்தக ரீதியாக கமல்ஹாசன் பெயர் பயன்படுத்த தடை:,
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அனுமதியின்றி வர்த்தக ரீதியில் கமல்ஹாசனின் பெயர் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி ‘நீயே விடை’ நிறுவனத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை பிப்ரவரி மாதத்துக்கு தள்ளிவைத்தார். அதேசமயம், கார்ட்டூன்களில் கமல்ஹாசனின் படத்தை பயன்படுத்த எந்தத் தடையும் இல்லை எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க: குப்பை என நினைத்த பையில் 45 பவுன் நகை…மறுகணமே தூய்மை பணியாளர் செய்த செயல்…நேர்மையுடம் வாழும் தம்பதி!
மேலும், வேறு எவரும் அனுமதியின்றி தனது புகைப்படம் மற்றும் பெயரை பயன்படுத்தக் கூடாது என கோரிக்கை விடுத்துள்ளதால், இந்த உத்தரவு குறித்து தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிட வேண்டும் என கமல்ஹாசன் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கில், நடிகர் கமல்ஹாசனின் புகழ் உரிமை (Personality Rights / Publicity Rights) மற்றும் பதிப்புரிமை (Copyright) ஆகியவை மீறப்பட்டுள்ளதாகவும், பிரபலங்களின் பெயர் மற்றும் புகைப்படங்களை அனுமதியின்றி வர்த்தக நோக்கில் பயன்படுத்துவது சட்டவிரோதம் எனவும் வாதிடப்பட்டுள்ளது.
வணிக மதிப்பு காரணமாக பெயர் பயன்படுத்துவத் தவறு:
மேலும், நடிகர் கமல்ஹாசன் பல தசாப்தங்களாக திரைத்துறையில் செயல்பட்டு வருவதால், அவரது பெயர், புகைப்படம் மற்றும் வசனங்களுக்கு வணிக மதிப்பு (Commercial Value) இருப்பதாகவும், அதனை பயன்படுத்தி லாபம் ஈட்டுவது அவரது உரிமைகளுக்கு எதிரானது எனவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதால், ‘நீயே விடை’ நிறுவனம் மட்டுமல்லாமல், ஆன்லைன் விற்பனை தளங்கள், சமூக வலைதள பக்கங்கள் மற்றும் பிற வர்த்தக நிறுவனங்களும் கமல்ஹாசனின் பெயர் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தக் கூடாது என்ற சட்ட எச்சரிக்கையாக இந்த உத்தரவு கருதப்படுகிறது.