Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இன்று ஆஜராகிறார் விஜய்.. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்..

TVK Vijay is appearing at the Delhi CBI: இவ்வழக்கில் முதல் தகவல் அறிக்கையில் விஜய்யின் பெயர் இடம்பெறவில்லை. எனினும், நேரில் சந்தித்து அவரிடம் இருந்து தகவல்களைப் பெறுவதற்காக விசாரணைக்கு அழைக்கப்பட்டார். இன்று காலை 11 மணிக்கு ஆஜராக வேண்டும் என சிபிஐ அறிவுறுத்தியது

டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இன்று ஆஜராகிறார் விஜய்.. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்..
தவெக தலைவர் விஜய்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 12 Jan 2026 07:00 AM IST

டெல்லி, ஜனவரி 12: கரூரில் நடந்த தவெக பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு இன்று (ஜனவரி 12) அக்கட்சியின் தலைவர் விஜய் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகிறார். இதனைத் தொடர்ந்து தலைநகரில் கூட்டம் திரளாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த செப்டம்பர் 27 அன்று விஜய் கரூரில் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியாகிய நிகழ்வு நாடு முழுவதும் அதிர்ச்சியைக் கிளப்பியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பொதுச்செயலாளர் ஆனந்த், இணைச் செயலாளர் நிர்மல் குமார், தேர்தல் மேலாண்மை பொது செயலாளர் ஆதவ் அர்ஜூனா மற்றும் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையும் படிக்க: தவெக கட்சி நிகழ்ச்சிகள் திடீர் ஒத்தி வைப்பு?அப்செட்டில் விஜய்…என்ன காரணம்!

சிபிஐ விசாரணை கோரிய தவெக:

தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒற்றை நபர் விசாரணை ஆணையம் அமைத்தது. அதே சமயம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்படி வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழுவும் விசாரணை செய்தது. ஆனால், தவெக கோரிக்கையின் பேரில் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. உச்சநீதிமன்றமும் இதற்கு ஒப்புதல் அளித்தது. தற்போது கரூர் அரசு சுற்றுலா மாளிகையில் சிபிஐ அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர்க்கு கொண்டு வரப்பட்ட விஜய் பிரச்சார வாகனம்:

கரூரில், ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா, மதியழகன் ஆகியோரிடம் நவம்பர் மாதத்தில் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், சம்மன் அனுப்பி டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்திலும் 3 நாட்கள் விசாரணை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் இருந்த விஜய்யின் பிரசார வாகனமும் சிபிஐயால் ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் அந்த வாகனம் கரூருக்கு கொண்டு வரப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. விசாரணை முடிந்து வாகனம் மீண்டும் திருப்பி அளிக்கப்பட்டது.

விஜய்க்கு சிபிஐ சம்மன்:

இவ்வழக்கில் முதல் தகவல் அறிக்கையில் விஜய்யின் பெயர் இடம்பெறவில்லை. எனினும், நேரில் சந்தித்து அவரிடம் இருந்து தகவல்களைப் பெறுவதற்காக விசாரணைக்கு அழைக்கப்பட்டார். இன்று காலை 11 மணிக்கு ஆஜராக வேண்டும் என சிபிஐ அறிவுறுத்தியது.

முதல் கட்டத்தில் வழக்கறிஞர்கள் மூலமாக விளக்கம் அளிக்க ஆலோசிக்கப்பட்டது. ஆனால் சிபிஐ அதனை ஏற்றுக்கொள்ளாததால், விஜய் நேரில் ஆஜராக முடிவு செய்தார். அதன்படி அவர் காலை 7 மணிக்கு தனியார் விமானத்தில் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு 11 மணிக்கு சிபிஐ அலுவலகத்தைச் செல்வார் எனத் தெரிகிறது.

டெல்லியில் பலத்த பாதுகாப்பு:

இதனிடையே, விஜய் டெல்லி வருவதை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் அங்கு செல்வதாக தகவல் வந்துள்ளது. இதனால் சிபிஐ அலுவலகப்பகுதி மற்றும் விஜய் பயணிக்கும் வழி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தவெக சார்பில் மத்திய அரசிடம் பாதுகாப்பு கோரிக்கை வைக்கப்பட்டதாகவும், அதற்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மத்திய ஆயுதப்படை காவல்துறையினர் மற்றும் டெல்லி போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க: தவெகவின் அடுத்த பொதுக்கூட்டம்.. அடுத்தடுத்த தடை.. மாஸ்டர் பிளான் போடும் விஜய்..

2 நாட்களுக்கு மேல் விசாரணை நீள வாய்ப்பு:

ஏற்கெனவே, தவெக இரண்டாம் கட்ட தலைவர்களிடம் கூட 3 நாள்களாக சிபிஐ விசாரணை நடைபெற்றது. அதேபோல், விஜய்யிடமும் நீண்டகால விசாரணை நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது. அவரும் அதற்கு ஏற்றாற்போல் தான் டெல்லி செல்ல உள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து, விசாரணையை முடித்து இன்று இரவு அவர் டெல்லியில் ஒரு சொகுசு விடுதியில் தங்க உள்ளதாக தெரிகிறது.