வறுமையின் கொடும் பிடியும்.. பாட்டியின் பாசப் போராட்டமும்.. சேலத்தில் அரங்கேறிய துயரம்!!
நிலத்தை விற்று வைத்திருந்த பணமும் முற்றிலும் கரைந்து போன நிலையில், வீட்டில் அன்றாடக் குடும்பச் செலவுகளுக்கும் சாப்பாட்டிற்கும் கடுமையான பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. மதுவிற்கே அடிமையாகிக் கிடந்த ராஜசேகர், தனது வயதான தாயார் அம்மணி மற்றும் மாற்றுத்திறனாளி மகள் ஆகியோரின் அன்றாடப் பசி மற்றும் மருத்துவச் செலவுகளுக்குத் தேவையான பணத்தைத் தராமல் முற்றிலும் புறக்கணித்து வந்துள்ளார்.
சேலம் மாநகரப் பகுதியில் வறுமையின் உச்சத்துக்கே சென்ற ஒரு குடும்பத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிப் பேத்தியைப் பாட்டியே கொன்றுவிட்டுத் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் பரிதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவம் குறித்துக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் கன்னங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் (44). இவர் வெங்காய வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு ஆரணி (35) என்ற மனைவியும், சதாஸ்ரீ (23) என்ற மகளும் இருந்தனர். இவர்களது மகள் சதாஸ்ரீ பிறவியிலேயே மாற்றுத்திறனாளியாகவும், மனநலம் பாதிக்கப்பட்டவராகவும் இருந்துள்ளார். குடும்பத்தில் நிலவி வந்த தொடர் கருத்து வேறுபாடுகள் மற்றும் சண்டைகள் காரணமாக, கணவர் ராஜசேகரையும், மாற்றுத்திறனாளி மகள் சதாஸ்ரீயையும் தவிக்கவிட்டு, பல ஆண்டுகளுக்கு முன்பே மனைவி ஆரணி குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார்.
மதுப்பழக்கத்தால் முடங்கிய தொழில்:
மனைவி பிரிந்ததற்குப் பிறகு, ராஜசேகர் தனது மகள் சதஸ்ரீ மற்றும் தனது தாயாரான அம்மணி (65) ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். ஆரம்பத்தில் குடும்பத்தை ஓரளவுக்குக் கவனித்து வந்த ராஜசேகர், சில ஆண்டுகளுக்கு முன்பு தனக்குச் சொந்தமாக இருந்த விவசாய நிலத்தை விற்றுள்ளார். நிலத்தை விற்றதன் மூலம் கிடைத்த பெரும் தொகையைக் கொண்டு சில காலம் குடும்பத்தை நடத்தியுள்ளார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக நாளடைவில் ராஜசேகர் கடுமையான மதுப்பழக்கத்திற்கு அடிமையானார். மது அரக்கனுக்கு முழுமையாக அடிமையானதால் ராஜசேகர் தனது வெங்காய வியாபாரத்திற்குச் சரியாகச் செல்லாமல் தொழிலை முடக்கினார்.
வறுமையின் பிடியும் தொடர் தகராறுகளும்:
நிலத்தை விற்று வைத்திருந்த பணமும் முற்றிலும் கரைந்து போன நிலையில், வீட்டில் அன்றாடக் குடும்பச் செலவுகளுக்கும் சாப்பாட்டிற்கும் கடுமையான பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. மதுவிற்கே அடிமையாகிக் கிடந்த ராஜசேகர், தனது வயதான தாயார் அம்மணி மற்றும் மாற்றுத்திறனாளி மகள் ஆகியோரின் அன்றாடப் பசி மற்றும் மருத்துவச் செலவுகளுக்குத் தேவையான பணத்தைத் தராமல் முற்றிலும் புறக்கணித்து வந்துள்ளார். இதனால் ஒட்டுமொத்தக் குடும்பமும் வறுமையின் கொடிய பிடிக்குள் சிக்கித் தவித்தது. அன்றாட உணவிற்கே வழியில்லாமல் தவித்த வயதான தாயார் அம்மணி, சாப்பாட்டுச் செலவிற்காகத் தன் மகன் ராஜசேகரிடம் பணம் கேட்கும் போதெல்லாம், அவர்களுக்கு இடையே தினமும் கடுமையான வாக்குவாதங்களும் தகராறுகளும் ஏற்பட்டு வந்துள்ளன.
பாட்டியின் விபரீத முடிவு:
வறுமையின் கொடுமையும், மகனின் குடிப்பழக்கத்தால் வீட்டில் நிலவி வந்த தினசரி நரக வேதனையும் அம்மணியை மனதளவில் கடுமையாகப் பாதித்தன. தினமும் கஷ்டப்படுவதை விடத் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக் கொள்வதே மேல் என்ற விபரீத முடிவுக்கு அம்மணி தள்ளப்பட்டார். ஆனால், தான் இறந்துவிட்டால், மனநலமும் உடலும் பாதிக்கப்பட்ட தனது பேத்தி சதாஸ்ரீயை ஆதரிக்கவும், பார்த்துக் கொள்ளவும் வேறு யாரும் இல்லை என்று நினைத்த அவர், பேத்தியையும் தன்னோடு அழைத்துச் சென்றுவிட எண்ணினார்.
கிணற்றுப் பகுதியில் நிகழ்ந்த கொடூரம்
இதனைத் தொடர்ந்து, தனது வீட்டின் அருகில் அமைந்திருக்கும் கிணற்றுப் பகுதிக்குத் பேத்தி சதாஸ்ரீயை அழைத்துச் சென்று, அங்குள்ள கிணற்றின் இரும்பு கம்பியில் சேலையை கட்டி பேத்தியை தூக்கில் தொங்கவிட்டுக் கொடூரமான முறையில் கொலை செய்தார். தொடர்ந்து, அதே கிணற்றின் இரும்பு கம்பியில் தானும் தூக்குப்போட்டுக் கொண்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டார். இச்சவம்பவம் அறிந்த அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், கிணற்றுப் பகுதியில் தூக்கில் தொங்கிய பாட்டி அம்மணி மற்றும் பேத்தி சதாஸ்ரீ ஆகிய இருவரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விரிவான விசாரணையைத் தொடங்கினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)