Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கிரிக்கெட் பயிற்சியாளர் மீது சரமாரி தாக்குதல்…3 வீரர்கள் வெறிச்செயல்!

Cricket chief Coach attacked: புதுச்சேரியில் கிரிக்கெட் போட்டிக்கு தங்களை தேர்வு செய்யாத ஆத்திரத்தில் கிரிக்கெட் சங்கத்தின் தலைமை பயிற்சியாளர் மீது கிரிக்கெட் மட்டையால் சரமாரியாக மூன்று கிரிக்கெட் வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பயிற்சியாளருக்கு இரு இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

கிரிக்கெட் பயிற்சியாளர் மீது சரமாரி தாக்குதல்…3 வீரர்கள் வெறிச்செயல்!
கிரிக்கெட் பயிற்சியாளர் மீது தாக்குதல்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 11 Dec 2025 12:10 PM IST

புதுச்சேரி கிரிக்கெட் சங்கத்தின் 19 வயதுக்குட்பட்டோர் அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் எஸ். வெங்கட்ராமன். இவர் 2025 சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 தொடருக்கு கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து வந்தார்.  இதில், புதுச்சேரி அணியில் கார்த்திகேயன் ஜெயசுந்தரம், அரவிந்த்தராஜ், சந்தோஷ் குமரன் ஆகிய 3 கிரிக்கெட் விரர்களை தேர்வு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், இந்த மூன்று கிரிக்கெட் வீரர்களும், பயிற்சியாளர் வெங்கட்ராமன் மீது கடும் ஆத்திரத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், புதுச்சேரி கிரிக்கெட் சங்க வளாகத்துக்கு நேற்று புதன்கிழமை (டிசம்பர் 10) வெங்கட்ராமன் வந்தார். அப்போது, தங்களை போட்டிக்கு தேர்வு செய்யாத ஆத்திரத்தில் இருந்த கார்த்திகேயன் உள்பட மூன்று பேர் வெங்கட்ராமனிடம் எங்களை ஏன் போட்டிக்கு தேர்வு செய்யவில்லை என்று கூறி கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

கிரிக்கெட் பயிற்சியாளர் மீது சரமாரி தாக்குதல்

அப்போது, அவர்களிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதில், கார்த்திகேயன் உள்பட மூவரும் கையில் வைத்திருந்த கிரிக்கெட் மட்டையால் பயிற்சியாளர் வெங்கட்ராமனை சரமாரியாக தாக்கி விட்டு தப்பியோடி விட்டனர். இந்த கொடூர தாக்குதலில் வெங்கட்ராமன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனே, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் படிக்க: கிறிஸ்துமஸ்க்கு சொந்த ஊர் போறீங்களா? சிறப்பு ரயில் அறிவிப்பு – எப்போ தெரியுமா?

தலை, தோள் பட்டையில் எலும்பு முறிவு

அங்கு, அவரை மருத்துவர்கள் பரிசோதித்ததில், அவருக்கு தலை மற்றும் தோள் பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. மேலும், உடலில் ஏற்பட்ட காயங்களுக்கு 20 தையல்கள் போடப்பட்டன. கிரிக்கெட் பயிற்சியாளர் வெங்கட்ராமன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக புதுச்சேரி போலீசார் வழக்குப் பதிந்து தலைமறைவாக உள்ள கிரிக்கெட் வீரர்கள் கார்த்திகேயன் ஜெயசுந்தரம், அரவிந்தராஜ், சந்தோஷ் குமரன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

புதுச்சேரியில் போலி சான்றிதழ் மூலம்…

இந்த விவகாரத்தில், தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் போலியான உள்ளூர் சான்றிதழ்களை பயன்படுத்தி புதுச்சேரி அணியில் இடம் பெறுவதாகவும், இதனால் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. இது தொடர்பாக புதுச்சேரி கிரிக்கெட் சங்கத்தில் மோதல்கள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே தற்போதைய மோதல் சம்பவம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை

இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் தேவஜித் சைகியா கூறுகையில், புதுச்சேரி கிரிக்கெட் சங்கத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் விரிவான விசாரணை மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: புதுச்சேரியில் ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு – முதல்வர் அறிவிப்பு