1.25 கிலோ தங்கம்.. பர்தா அணிந்து வந்த நபர்.. சென்னை வங்கியில் நடந்தது என்ன? ஷாக் தகவல்கள்!
Velachery Bank Unclaimed Gold Jewellery: வேளச்சேரியில் உள்ள வங்கியில் கேட்பாரற்று கிடந்த தங்க நகை விவகாரத்தில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அந்த வங்கியின் முன்னாள் மேலாளர் ஈடுபட்டுள்ளத தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை வேளச்சேரியில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கடந்த டிசம்பர் 5- ஆம் தேதி பர்தா அணிந்து வந்த பெண் ஒருவர் வங்கி ஊழியரிடம் தனது பெயர் ஷர்மிளா பானு எனவும், தனது கணவர் பெயர் அப்துல்லா எனவும் அறிமுகமாகியுள்ளார். பின்னர், வங்கியில் புதிதாக கணக்கு தொடங்குவது மற்றும் லாக்கர் வசதி குறித்து கேட்டுள்ளார். அப்போது, வங்கி மேலாளர் வெளியே சென்று இருப்பதாக கூறிய ஊழியர், அந்த பெண்ணிடம் வங்கி கணக்கு தொடங்குவதற்கான ஆதாரங்களை கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது, அந்த பெண் ஆதாரங்கள் எதுவும் எடுத்து வரவில்லை என்று கூறியுள்ளார். இதன் பின்னர், அந்தப் பெண் வங்கியில் இருந்து புறப்பட்டு வெளியே சென்றுள்ளார்.
கேட்பாரற்று கிடந்த 1.25 கிலோ தங்க நகை
பின்னர், வங்கியில் பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பையை ஊழியர்கள் எடுத்து பார்த்தபோது அதில், 1.250 கிலோ தங்க கட்டிகள், நகைகள் இருந்தது தெரியவந்தது. இந்த நகைக்கு யாரும் உரிமை கூறவில்லை. பின்னர் இது குறித்து, வங்கி தரப்பில் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், வங்கியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
மேலும் படிக்க: SIR: வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? சரிபார்ப்பது எப்படி?
பர்தா அணிந்து வந்த முன்னாள் மேலாளர்
அதில், வங்கியில் நகைகளை விட்டுச் சென்றது பர்தா அணிந்து வந்த அந்த வங்கியின் முன்னாள் மேலாளர் பத்மப்ரியா என்பது தெரியவந்தது. மேலும், வேளச்சேரியைச் சேர்ந்த பெண் ஒருவர் அமெரிக்காவில் வசித்து வரும் நிலையில், அவரது 258 பவுன் தங்க நகைகள் இதே வங்கியின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்தது. இந்த லாக்கரை அந்த பெண் சில ஆண்டுகளாக பயன்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
கள்ளச்சாவி மூலம் லாக்கரில் உள்ள நகை திருட்டு
இதை அறிந்து கொண்ட வங்கியின் மேலாளராக பணிபுரிந்த பத்மபிரியா கள்ளச்சாவி மூலம் வங்கியின் லாக்கரை திறந்து நகைகளை கொள்ளை அடித்தது தெரியவந்தது. இந்தச் சம்பவத்தில் கைதாகி பிணையில் வந்த பத்மபிரியா தனது கையில் மீதமிருந்த நகையை வங்கியில் விடுவதற்காக பர்தா அணிந்து வங்கிக்கு சென்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, பத்ம பிரியாவை போலீசார் கைது செய்தனர். அவர் வங்கியில் விட்டு சென்ற நகைகள் யாருடையது என்பது தொடர்பாக போலீசார் விசாரணை கொண்டு வருகின்றனர். மேலும், இவர் வேறு யாருடைய நகைகள் திருடி உள்ளார் என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: அதிவேகமாக பரவும் உண்ணி காய்ச்சல்…தமிழகத்துக்கு அலர்ட்!



