ஈசிஆரில் கார் ரேஸ்? மருத்துவ மாணவி மரணம்… 3 பேர் கவலைக்கிடம் – அதிர்ச்சி தகவல்
மருத்துவ கல்லூரி மாணவர்கள் 10 பேர் மாமல்லபுரம் அருகே இரவு விருந்தில் கலந்துகொண்டு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் 2 கார்களில் அவர்கள் போட்டிபோட்டுக்கொண்டு வந்த போது எதிர்பாராத விதமாக அவர்கள் வந்த கார் விபத்தில் சிக்கியது. இதில் கல்லூரிமாணவி சம்பவ இடத்திலேயே பலியானார்.
சென்னை, டிசம்பர் 11: சமீப காலமாக போக்குவரத்து விதிமீறல்களால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கல்லூரி மாணவர்கள் பைக் மற்றும் கார்களை வைத்து சாலையில் சாகசத்தில் ஈடுபடுவதால் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதுடன் விபத்துகளும் அதிகரித்திருக்கின்றன. இந்த நிலையில் சென்னை அருகே திருப்போரூரில் ஏற்பட்ட கார் விபத்தில் கல்லூரி மாணவி பரிதாபமாக உயரிழந்துள்ளார். மாணவர்கள் கார்களில் சாலையில் போட்டி போட்டுக்கொண்டு ரேசில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சாலை விபத்தில் கல்லூரி மாணவி பரிதாப மரணம்
மருத்துவ கல்லூரி மாணவர்கள் 10 பேர் டிசம்பர் 10, 2025 அன்று மாமல்லபுரம் அருகே உள்ள நட்சத்திர விடுதியில் இரவு விருந்தில் கலந்து கொண்டுள்ளனர். பின்னர் அதிகாலை 3 மணிக்கு இரண்டு கார்களில் சென்னை திருப்பியுள்ளனர். இந்த நிலையில் இரண்டு கார்களும் போட்டி போட்டுக்கொண்டு அதிவேகமாக சென்று கார் ரேசில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஒரு கட்டத்தில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற லாரி மீது மோதியது. இந்த நிலையில் அதில் இருந்த மிஸ்பா பாத்திமா என்ற கல்லூரி மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் பயணித்த மற்ற 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதையும் படிக்க : டெலிவரி செய்ய சென்ற இடத்தில் ‘காதல்’.. விபரீத ஆசையால் இளைஞருக்கு நேர்ந்த சோகம்!!




3 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை
இந்த நிலையில் மற்ற கார்களில் இருந்தவர்கள் உடனடியாாக ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவிக்க உடனடியாக அவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கவலைக்கிடமான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிக்க : திருவொற்றியூரில் ரவுடியை வெட்டி படுகொலை செய்த மர்ம கும்பல்… குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற பரபரப்பு சம்பவம்
இதனை நேரில் பார்த்தவர்கள் இரண்டு கார்களும் போட்டிபோட்டுக்கொண்டு வந்ததாகவும், அதில் ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாகவும் தெரிவித்தனர். சமீப காலமாக பைக் மற்றும் கார்களில் ஸ்டண்டில் ஈடுபடுவது ரேசில் ஈடுபடுவது என பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரிக்கின்றன. ரீல்ஸ் மோகத்தில் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதோடு பொது சொத்துக்கு ஆபத்தும் ஏற்படுகின்றன. எனவே இவற்றை கட்டுப்படுத்த காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை அதிகரித்திருக்கிறது.