தமிழகத்தில் EVM இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் தொடக்கம்.. பரபரக்கும் தேர்தல் பணிகள்!!
Tamilnadu Assembly Election: தற்போதைய இயந்திரங்களில் இருந்த வாக்காளர் விவரங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு, ஒவ்வொரு பொத்தானும் சரியாக செயல்படுகிறதா என்று பரிசோதிக்கப்படும். பழுதான இயந்திரங்களை சம்பந்தப்பட்ட பெல் பொறியாளர்கள் சரி செய்கிறார்கள், சரி செய்ய முடியாவிட்டால் அந்த இயந்திரங்கள் மட்டும் அகற்றப்படுகின்றன.
சென்னை, டிசம்பர் 11: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஒரு பக்கத்தில் அரசியல் கட்சிகள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். மறு பக்கம் தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. இதனிடையே வாக்காளர் சிறப்பு திருத்த பணியானது தமிழகத்தில் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதில் தமிழக வாக்காளர்கள் 75 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நீக்க வாய்ப்புள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, டிசம்பர் 16ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது. அதில், பெயர் இல்லாதவர்கள் தங்களது பெயரை சேர்த்து கொள்ள ஜனவரி மாதம் வரை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
மேலும் படிக்க: தமிழ்நாட்டில் 70 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கம்? நீக்கப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும்? வெளியான அறிவிப்பு
தொகுதி வாரியாக இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி:
அந்தவகையில், தமிழகம் முழுவதும் இன்று (டிசம்பர் 11) அரசு அலுவலர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை தொகுதி வாரியாக சரிபார்க்கும் பணியை தொடங்கியுள்ளனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட இந்த இயந்திரங்கள் மாவட்டங்களில் சீல் செய்யப்பட்ட அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இவை அரசியல் கட்சிகளின் முன்னிலையில் மீண்டும் இன்று திறக்கப்பட்டு வருகிறது. தற்போதைய இயந்திரங்களில் இருந்த வாக்காளர் விவரங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு, ஒவ்வொரு பொத்தானும் சரியாக செயல்படுகிறதா என்று பரிசோதிக்கப்படும். பழுதான இயந்திரங்களை சம்பந்தப்பட்ட பெல் பொறியாளர்கள் சரி செய்கிறார்கள்; சரி செய்ய முடியாவிட்டால் அவை அகற்றப்படுகின்றன.
அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனிருந்து ஆய்வு:
இந்த சோதனையின் போது அங்கீகரிக்கப்பட்ட 12 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உடனிருந்து ஆய்வு மேற்கொள்கின்றனர். அனைத்து கணக்குகளும் பூஜ்யமாக இருப்பதை உறுதி செய்த பிறகு, சரியாக செயல்படும் இயந்திரங்களுக்கு ‘ஓகே’ என்று பதிவு செய்யப்படும். நீதிமன்றத்தில் ஏதேனும் வழக்குகள் நிலுவையில் உள்ள தொகுதிகளுக்கான இயந்திரங்கள் மட்டும் திறக்கப்படாது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள ந நிலையில் மின்னணு வாக்கு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி தொடங்கப்பட்டதன் மூலம், அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையமே தங்களது பணியை தொடங்கிவிட்டதாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
மேலும் படிக்க: கிறிஸ்துமஸ்க்கு சொந்த ஊர் போறீங்களா? சிறப்பு ரயில் அறிவிப்பு – எப்போ தெரியுமா?
வேறு மாநிலங்களில் இருந்து பெற முடிவு:
அந்தவகையில், 1 லட்சத்து 50 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், விவிபேட் இயந்திரங்கள் ஆகியவற்றில் முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று முதல் மேற்கொள்ளப்படுகிறது. தொடர்ந்து, சட்டமன்ற தேர்தலுக்கு கூடுதல் இவிஎம் இயந்திரங்கள் தேவைப்படும் பட்சத்தில் தேர்தல் நடைபெறாத மாநிலங்களில் இருந்து இவிஎம் இயந்திரங்களை பெறவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.