திருப்பரங்குன்றம் மலையில் தொல்லியல் துறையினர் ஆய்வு…என்ன காரணம்!
Thiruparankundram Hill Archaeological Survey: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தொல்லியல் துறையைச் சேர்ந்த 7 பேர் கொண்ட குழு அதிரடி ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் மூலம் பல்வேறு தகவல்கள் சேகரித்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள சிக்கந்தர் பாட்ஷா தர்கா அருகே உள்ள தீபத் தூணியில் கார்த்திகை தீபத் திருநாளையொட்டி, தீபம் ஏற்றுவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீபத் தூணில் தீபம் ஏற்றலாம் என்று உத்தரவு பிறப்பித்து இருந்தார். ஆனால், இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது, இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு அந்த மனுவை விசாரித்து ஜி.ஆர். சுவாமிநாதன் வெளியிட்ட உத்தரவு சரி என்று கூறியது.
உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு
இதைத் தொடர்ந்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக உத்தரவு பிறப்பித்திருந்த நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக மக்களவை தலைவர் ஓம் பிர்லாவிடம் திமுக எம் பி க்கள் குற்றச்சாட்டு புகார் அளித்திருந்தனர். மேலும், மக்களவையில் அளிக்கப்பட்டிருந்த மனுவுக்கும், திருப்பரங்குன்றத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று திமுக எம்பியான திருச்சி சிவா தெரிவித்து இருந்தார். இவ்வாறாக திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
மேலும் படிக்க: நியாயம் கிடைக்கும் இடமாக நீதிமன்றம் திகழ வேண்டும்…திருச்சி சிவா எம்.பி!




திருப்பரங்குன்றம் மலையில் தொல்லியல் துறை ஆய்வு
இந்த நிலையில், தமிழ்நாடு தொல்லியல் துறையின் துணை இயக்குனர் யதீஷ்குமார் தலைமையிலான 7 பேர் கொண்ட குழு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நேற்று புதன்கிழமை (டிசம்பர் 10) ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வானது சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது. இந்தக் குழுவானது காலை 8.45 மணிக்கு மலை ஏற தொடங்கி, அங்கு மலையின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள தீப தூண், நெல்லித்தோப்பு பகுதி மற்றும் தீப சடங்கு மேற்கொள்ளப்படும் தற்போதைய இடம் ஆகியவற்றை தீவிரமாக ஆய்வு செய்தது. இந்த ஆய்வில் பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆய்வின் அடிப்படையில் அடுத்தப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
பல ஆண்டுகளாக நீடித்து வரும் பிரச்னை
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக பல ஆண்டுகளாக சட்ட ரீதியான மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றங்களில் பல்வேறு மனுக்கள் அளிக்கப்பட்டிருந்தன. மேலும், பல்வேறு அமைப்புகள் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்களும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றலாம் என்று உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க: திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவிற்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு