நியாயம் கிடைக்கும் இடமாக நீதிமன்றம் திகழ வேண்டும்…திருச்சி சிவா எம்.பி!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக மதுரை நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் அளித்த குற்றச்சாட்டு மனு தொடர்பாக திருச்சி சிவா எம் பி பரபரப்பு பேட்டி அளித்தார்.
இது தொடர்பாக திமுகவை சேர்ந்த திருச்சி சிவா எம் பி டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக 13 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தான் நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதப் பிரச்சினையை கிளப்பி ஆதாயம் தேடுவதற்கு தன் நலம் சார்ந்த சில பிரிவினர் முயற்சி செய்கின்றனர். எனவே, நாங்கள் கொடுத்த மனுவானது திருப்பரங்குன்றத்துக்கு தொடர்பு இல்லாதது. 13 குற்றச்சாட்டுகளும் மீண்டும் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க கோரி மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கும் இடம் நீதிமன்றம்
இந்தியாவில் சட்டமன்றம், நீதிமன்றம், நிர்வாகம் ஆகியவற்றில் ஒன்று தனது கடமையை செய்ய தவறினால் மற்றொன்று தலையிட்டு அதனை சரி செய்ய வேண்டும் என்பது அதில் இருக்கக்கூடிய நடைமுறை மற்றும் விதிமுறையாகும். நீதிமன்றம் என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கக்கூடிய இடமாக உள்ளது. ஆனால் அந்த நீதிமன்றத்தில் உள்ளவரே முறைக்கு மாறாக நடந்து கொண்டால், அந்த விவகாரம் சட்டமன்றத்துக்கு வரலாம்.
மேலும் படிக்க: ஓபிஎஸ், டிடிவி தினகரனை சந்தித்த அண்ணாமலை.. திடீர் டெல்லி பயணம்.. பின்னணி என்ன?
நீதி வழங்குபவர் நம்பிக்கை தருபவராக இருக்க வேண்டும்
அந்த அடிப்படையில் தான் திருப்பரங்குன்றம் விவகாரம் நாடாளுமன்றத்துக்கு வந்துள்ளது. நீதி வழங்கும் பொறுப்பில் இருக்கக்கூடியவர் நம்பிக்கை தரும் வகையில் இருக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட மனுவில் திருப்பரங்குன்றம் மலை மற்றும் தீபம் ஏற்றுவது குறித்து குறிப்பிடப்படவில்லை. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த விவகாரத்தில் மக்களவைத் தலைவர் நியாயமாக நடந்து கொண்டால் இந்த மனுவை ஏற்க வேண்டும் அல்லது நிராகரிக்க வேண்டும்.
140 கோடி மக்கள் நம்பிக்கை இழந்து விடக்கூடாது
ஏற்கனவே, இதேபோல குற்றச்சாட்டு நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்டு அது மக்களவைக்கு வரும் நேரத்தில் சம்பந்தப்பட்ட நபர் தனது பணியை ராஜினாமா செய்து உள்ளார். அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 140 கோடி மக்கள் தொகை இருக்கக்கூடிய இந்தியாவில் இப்படிப்பட்ட நபர் நீதித்துறையில் இருக்கிறார் என்றால் அந்த மக்களுக்கு நீதித்துறை மீது நம்பிக்கை இல்லாமல் போய்விடும்.
அனைத்து நீதிமன்றங்களும் சமமானவை
அந்த நம்பிக்கை போய்விடக் கூடாது என்பதற்காகவே மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து இந்த மனுவை அளித்துள்ளோம். நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்றங்களும் சமமானவை தான். இந்த நீதிமன்றங்கள் சரியான தீர்ப்பை வழங்குகின்றன. வழங்க வேண்டும் என்ற நம்பிக்கை உள்ளது என்று திருச்சி சிவா எம். பி. தெரிவித்தார்.
மேலும் படிக்க: திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவிற்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு



