மின்தடைக்கு தீர்வு.. ரூ. 15,032 கோடி மதிப்பீட்டில் 231 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க உத்தரவு..
மின் பழுதுகள் தொடர்பான புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து சரிசெய்ய வேண்டும் என்றும், சென்னையில் உள்ள 125 ரோந்து குழுக்கள் அவசர பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார். பொதுமக்களுக்கு தடையற்ற மற்றும் தரமான மின்சார சேவையை வழங்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஜூன் 16, 2026: தமிழ்நாட்டின் மின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த 15,032 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 231 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கவும், மின் பழுதுகளை சரிசெய்ய தேவையான 15,058 மின் பணியாளர்களை முறைப்படி நியமிக்கவும், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற எரிசக்தித் துறை ஆய்வுக் கூட்டத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியான மின்வெட்டு நிலவி வருவதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த பிரச்சனையை விரைவில் சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மின்தடை ஏற்பட காரணங்கள் என்ன?
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் மின் உற்பத்தி மற்றும் மின் கொள்முதல் போதுமான அளவில் இருப்பதால் மின்சார பற்றாக்குறை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சென்னை உள்ளிட்ட நகர்ப்புறங்களில் பழமையான மின் உபகரணங்கள், நிலத்தடி மின் கேபிள் பழுதுகள், அதிகரித்த மின் பயன்பாடு, பராமரிப்புப் பணிகள் மற்றும் சாலை தோண்டும் பணிகளின்போது மின் கேபிள்கள் சேதமடைவது போன்ற காரணங்களால் அவ்வப்போது மின்தடைகள் ஏற்படுகின்றன என கூறப்பட்டுள்ளது.
இதற்கு நிரந்தர தீர்வு காண, சென்னை மாநகரில் மட்டும் 2,275 கோடி ரூபாய் மதிப்பில் மின் விநியோக கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. மேலும், மாநிலம் முழுவதும் 121 புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட துணை மின் நிலையங்கள் 10,109 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
231 புதிய துணை மின் நிலையங்கள்:
மின் விநியோக சேவையை மேம்படுத்த 77 புதிய மின்தடை நீக்க மையங்கள், 7 கூடுதல் மின் பழுது நீக்கும் குழுக்கள், 125 மின் பழுது நீக்கும் வாகனங்கள், 10 உயர்மட்ட கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் 2 நிலத்தடி கேபிள் பழுது கண்டறியும் குழுக்கள் செயல்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், 231 புதிய துணை மின் நிலையங்கள் 15,032 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளன.
மேலும், ‘மின்னகம்’ (94987 94987) மூலம் 24 மணி நேரமும் பொதுமக்களின் புகார்கள் கண்காணிக்கப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விரைவில் வாட்ஸ்அப் சேவையும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
மேலும் படிக்க: திமுக ஆட்சியில் கடன் 2 மடங்கு உயர்வு.. வருவாய் பற்றாக்குறை வரலாறு காணாத உச்சம்.. வெள்ளை அறிக்கை வெளியீடு!
இக்கூட்டத்தில், மின் பழுதுகள் தொடர்பான புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து சரிசெய்ய வேண்டும் என்றும், சென்னையில் உள்ள 125 ரோந்து குழுக்கள் அவசர பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார். பொதுமக்களுக்கு தடையற்ற மற்றும் தரமான மின்சார சேவையை வழங்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.